Episode 119 DOCAT 58, பொருளாதார நடவடிக்கைகள்
கடந்த பல அத்தியாயங்களிலாக, தொழில் மற்றும் தொழிலாளர்கள்
உரிமைகள் பற்றி பேசி வந்தோம். இந்த அத்தியாயம் முதல் பொருளாதார நடவடிக்கைகள்
பற்றிப் பார்க்க இருக்கிறோம்.
நமக்குத் தெரியும், பணம் இன்றி வாழ முடியாது. இன்று
அச்சிடப்பட்டப் பணத்தை விட அதிகமாக, டிஜிட்டல் பணப்பரிமாற்றமானது நடக்கிறது. அது
எப்படியாக இருந்தாலும், பணம் இல்லையென்றால் மனிதரால் வாழ முடியாது. சாதாரண
மனிதர்களுடைய கைகளில் பணம் வரவேண்டுமென்றால், அது அரசும், அரசு சார்ந்த பொருளாதார
நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் முன்னெடுக்கும் பொருளாதார நடவடிக்கைகளைச்
சார்ந்து இருக்கிறது. விவசாயி உற்பத்திச் செய்யும் நெல், கோதுமை, காய்கனிகள் போன்ற
விளைப்பொருட்களுக்கு உரிய விலை சந்தையில் கிடைக்கவில்லையென்றால் அது பிரச்சனையாக
மாறுகிறது. அவரோடு சேர்ந்து உழைக்கின்ற மக்கள், அவ்வுழைப்பைச் சார்ந்து வாழும்
குடும்பங்கள் அனைத்தும் பாதிக்கப்படும். ஆக அரசின் நடவடிக்கைகள், அவர்களின் நலனைப்
பேணும் வகையில் அமைய வேண்டும்.
வருடந்தோறும் மாநில அரசும் மத்திய அரசும்
சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் பட்ஜெட் தாக்கல் செய்வதுண்டு. அரசுக்குச்
செலுத்த வேண்டிய வரி, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு வரும் திட்டங்கள் போன்றவற்றை
பற்றிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறுவதுண்டு. மேலும் தனியார் நிறுவனங்கள் பல
திட்டங்களை முன்னெடுப்பதுண்டு. இவைகள் தனித்து இயங்குவதற்கு சுதந்திரம்
பெற்றிருந்தாலும், அரசுக்குக் கட்டுப்பட்டுத்தான் செயல்பட முடியும்.
இப்படியாக முன்னெடுக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகள்
பற்றி திருஅவைப் பேசுகிறது. அது எப்போதும் அனைத்து மக்களின் நலனைக் கருத்தில்
கொண்டு அமைய வேண்டும் என்றுத் திருஅவை வலியுறுத்துகிறது. மேலும், அது நீதியை
அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும்
என்பதையும் முன்னெடுக்கிறது இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின், இன்றைய உலகில்
திருஅவை என்னும் ஏட்டின் 63 ஆவது எண் பின்வருமாறு கூறுகிறது. “சமூக
பொருளாதார வாழ்விலும்கூட மனிதர்களின் மாண்பு, அவர்களது பெற்றிருக்கும்
அழைத்தல், மற்றும் சமுதாய நலன் அகியவை மதிக்கப்பட்டு
மேம்படையச் செய்ய வேண்டும். ஏனெனில் சமூக, பொருளாதார வாழ்வு என அனைத்தின் ஊற்றும்
மையமும் நோக்கமுமாக இருப்போர் மனிதரே.” ஆக, அனைத்து சமூகப்
பொருளாதார நடவடிக்கைகளும் மனிதரை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும் என்பதை
திருஅவையானது வலியுறுத்துகிறது.
Docat நூலின் 158 ஆவது எண் பொருளாதார
நடவடிக்கைகளைப் பற்றிய வரையறையைத் தருகிறது. ‘இது சமூக உறவு
நிலையின் பகுதியாக இருக்கிறது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் தங்களுடைய பொருளாதாரத்
தேவைகளுக்காக நடத்திக்கொள்ளும் பரிமாற்றங்களைக் குறிக்கிறது. ஒருவர் இன்னொருவரின்
தேவையே பூர்த்திச் செய்கிறார். பொருளாதார நடவடிக்கையில் உற்பத்தி,
பண்டப்பரிமாற்றம், பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வு ஆகியவை நடக்கிறது.
மேலும் 159 ஆவது எண்ணானது, பொருளாதார நடவடிக்கைகளின்
நோக்கத்தைப் பற்றிப் பேசுகிறது. நம்முடைய அன்றாட வாழ்வுக்குத் தேவையாக இருப்பவற்றை
எல்லாம் தந்து உதவுவது பொருளாதார நடவடிக்கை என்றுக் கூறலாம். இதற்கான
மூலப்பொருட்களாக, இயந்திரங்கள், நிலம் மற்றும் மண், மனித உழைப்பு ஆகியவை உள்ளன.
இவைகள் வழியாக உற்பத்திச் செய்யப்படும் பொருட்கள் அனைத்து மனிதர்களையும் சென்றடைய
வேண்டும். இவற்றை ஆக்கப்பூர்வமாக கையாளும் முறையில் அரசு மற்றும் தனியார்
நிறுவனங்களில் நடவடிக்கைகள் அமைய வேண்டும். காரணம் இந்நடவடிக்கைள் அனைத்தும்
மனிதரையே நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர்களின் அவர்களின் அன்றாடத் தேவைகளை
நிவர்த்திச் செய்யும் பொருட்டே இந்நடவடிக்கைகள் அனைத்தும் அமைகின்றன.
0 Comments