Episode 118 DOCAT 57, உரிமைக்கான போராட்டம்

இன்றய தினம் Docat எண் 156 மற்றும் 157 ஆகிய எண்களில் காணப்படும் தொழற்சங்கள் மற்றும் ஊழியர்களின் போராட்டங்கள் பற்றி நாம் பார்க்க இருக்கிறோம்.

தொழிலாளர் நலச் சங்கங்கள் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். அதுபோல, மறியல் போராட்டங்கள், உரிமைக்கானப் போராட்டங்கள் எனப் பலவற்றை நாம் பார்த்திருப்போம். இதைப் பற்றிக் கத்தோலிக்கத் திருஅவை என்ன கூறுகிறது என்பதைப் பற்றி நாம் பார்ப்போம்.

தொழிலாளர்களுக்கு உரியக் கூலிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதைக் குறித்து கடந்த இரண்டு அத்தியாயங்களிலாக நாம் பார்த்தோம். உரிய கூலி கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது? அரசு, குடிமக்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகளைப் நிறைவேற்றாமல் இருந்தால் என்ன செய்வது? அமைதியாக இது கடவுளின் விதி என்று கடந்துப் போகலாமா? என்பதே கேள்வியாக எழுகிறது. உரிமைக்கானப் போராட்டங்களை திருஅவை எப்போதும் ஆதரிக்கிறது.

Docat நூலின் 156 ஆவது பத்தி இவ்வாறு கூறுகிறது.

தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே சமமான உரிமைப்பகிர்வு இல்லை. இருவருக்குமிடையே ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. ஆகையால், தொழிலார்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதற்காக முதலாளிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. இதற்காக அவர்கள் கூட்டமாக சேர்ந்து சங்கங்களாக மாறவும் போராட்டங்களை முன்னெடுக்கவும் வேண்டியிருக்கிறது. இதன் வழியாக உரிமைகள் மீண்டெடுக்கப்படுகின்றன. தொழிலாளர் சங்கங்களின் உரிமைகள் மனித உரிமைகளாக இருக்கின்றன.

திருஅவைத் மேலும் பின்வருமாறு கற்பிக்கிறது. தொழிலாளிகளும் முதலாளிகளும் ஒரே விதத்திலான நோக்கங்களைக் கொண்டிருக்க மாட்டார்கள். முதலாளி அதிகம் உற்பத்திச் செய்யவும், அதிகம் லாபம் ஈட்டவும் விரும்புவார். அவர் தனது நிறுவனத்தைப் பெரிதாக்கவே விரும்புவார். ஆனால் தொழிலாளி அப்படியல்ல. அவருக்கு குடும்பச் சூழ்நிலைகள், வீடு, வாடகை, இதரச் செலவுகள் என அன்றாட வாழ்வின் சிக்கல்கள் ஏராளமாக இருக்கும். ஆகையால் இருவரும் இருவேறு நோக்கங்களைக் கொண்டிருப்பார்கள். அதனால் ஊதியம், ஓய்வூதியம், வேலைநேரம் பற்றிய சிக்கல்கள் எழும். இவ்வுரிமைகளை முதலாளிகளிடம் பேசிப் பெற்றுத் தருவதற்காக, தொழிலார்கள் சார்பாக சில அமைப்புகள் அவசியம். அவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் தொழிலாளர்கள் சார்பாக முதலாளிகளிடம் பேசுவார்கள். இத்தகைய அமைப்பு முறை, தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக அவசியம்.

தொழிலாளர் அமைப்புகளின் பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் போது, தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதும் அவர்களின் உரிமை. அது பாவமல்ல. இவற்றில் வன்முறைகள் ஏற்படக்கூடாது. அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும்.

தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளைச் செயல்படுத்தும் பொருட்டு நடத்துகின்ற வேலைநிறுத்தம் இன்றைய சூழ்நிலைகளில்கூட, கடைசியானதாய் இருப்பினும், தேவையான ஒரு காரியமாக இருக்கலாம் என வத்திக்கான் திருச்சங்கத்தின் இன்றைய உலகில் திருச்பை என்னும் ஏட்டின் 68 ஆவது எண் கூறுகிறது. போராட்டம் தவறல்ல, ஆனால் அது நியாயமானதாக இருக்க வேண்டும் எனத் திருஅவை அறிவுறுத்துகிறது.

நாட்டில் சட்ட ஒழுங்கு சீர் கெட்டு, ஊழல் பெருகும் போது ஒத்துழையாமை இயக்கம் கூட ஒருப் புனிதக் கடமையாக மாறும் என மகாத்மா காந்தி கூறுகிறார்.



Post a Comment

0 Comments