Episode 117 DOCAT 56, நியாயமான கூலி -2

இன்றய தினம் Docat எண் 155 எண்ணில் காணப்படும் நியாயமான கூலி என்னும் பொருளாதாரக் கருத்தைப் பற்றிப் பார்க்க இருக்கிறோம்.

நண்பர்களே, கடந்த அத்தியாயத்தில் தொழிலாளர்களைச் சுரண்டும் போக்குப் பற்றியும் அது நவீன காலத்தில் எப்படி நடக்கிறது என்பதைப் பற்றியும் பார்த்தோம். இன்றைய அத்தியாயத்தில் அதன் தொடர்ச்சியாகக் கூடுதல் தகவல்களைப் பார்ப்போம்.

தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டியக் கூலியைப் பற்றித் திருத்தந்தை இரண்டாம் ஜாண் பால் பின்வருமாறுக் கூறுகிறார்:

அன்றாடம் வாழ்வை நகர்த்தப் பெரும்பாடு படும் சாதாராணத் தொழிலாளர்களையும், எளியவர்களான மனிதர்களையும் அச்சுறுத்தி, நெருக்கத்துக்கு உட்படுத்தி, கடினமான வேலை செய்ய வைத்து லாபம் அடைதல் குற்றம். இது, மனித சட்டத்தின்படியும் கடவுளின் சட்டத்தின்படியும் குற்றமே. தொழிலாளிக்கு உரியக் கூலியைக் கொடுக்காமல் பிடித்து வைத்தல் கடவுளின் தண்டனைக்கு உட்பட்டது. கடவுளை நோக்கி, அக்குரல் எழும்பிய வண்ணம் இருக்கும்.

போர் அடிக்கும் மாட்டின் வாயைக் கட்டாதே என்று இணைச்சட்டம் நூல் 25 ஆம் அதிகாரம் 4 ஆம் வசனத்தில் பார்க்கிறோம். அதாவது வேலைச் செய்யும் தொழிலாளியின் வாயைக் கட்டாதே, அல்லது கூலியைக் கொடுக்கத் தவறாதே என்பது இதன் கருத்து. மேலும் இணைச்சட்டம் 24, 14 மற்றும் 15 ஆம் இறைவார்த்தைகள் பின்வருமாறு கூறுகிறது:  

வறியவரும் எளியவருமான கூலியாள்கள், உன் இனத்தாராயினும் சரி அல்லது உன்நாட்டில் உன் நகர்வாயிலுக்குள் உள்ள அந்நியராயினும் சரி, அவரைக் கொடுமைப்படுத்தாதே. அவரது கூலியை அந்தந்த நாளில் கொடுத்துவிடு. கதிரவன் மறையுமுன்னே கொடு. ஏனெனில், அவர் வறியவராய் இருப்பதால், அவரது பிழைப்பு அதில் அடங்கியுள்ளது. இல்லையெனில், உனக்கெதிராக ஆண்டவரை நோக்கி முறையிடுவார். அப்போது அது உனக்குப் பாவமாகும்.

மேலும், உங்கள் வயலில் அறுவடை செய்த வேலையாள்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள்; அது கூக்குரலிடுகிறது. அறுவடை செய்தவர்களின் கூக்குரல் படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளதுஎன்று புனித யாக்கோபு தனது திருமுகத்தில் 5 ஆம் அதிகாரம் 4 ஆம் வசனத்தில் கூறுகிறார்.

தொழிலாளர்களுக்கு உரியக் கூலி கொடுக்க வேண்டும் என்பதைத் திருஅவை தொடக்கம் முதலே வலியுறுத்தி வந்திருக்கிறது. தொழிலாளி தன்னுடைய குடும்பத் தேவையை நிறைவேற்றுவதற்குப் போதுமான கூலி கொடுக்கப்பட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் இது சற்றே வித்தியாசமாக முன்வைக்கப்படுகிறது. சமூகத்தில், மாண்புமிக்க வாழ்வை மேற்கொள்வதற்குத் தேவையானக் கூலியை முதலாளிகள் கொடுக்க வேண்டும். நியாயமான கூலி என்பதை வரையறுப்பது சற்று சிக்கல் மிக்கதாய் இருக்கிறது. இது ஒவ்வொரு தொழில் நிறுவனங்களுக்கும் ஏற்ப மாறுபடுகிறது. ஆனால், முதலாளிகள் லாபம் ஒன்றையே நோக்கமாகக் கொள்ளாமல் தொழிலாளிகளின் நலனையும் பேணுபவர்களாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். இன்று, லட்சக்கணக்கில் மாதச் சம்பளம் வாங்குபவர்களும் இருக்கிறார்கள். மிகக்குறைந்த அளவில் சம்பளம் வாங்குவோரும் இருக்கிறார்கள். இத்தகைய ஏற்றத்தாழ்வு பொதுநலனுக்குக் கேடு விளைவிக்கும் என்று திருஅவை எச்சரிக்கிறது. இதுக் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மிக அதிகச் சம்பளம், மிகவும் குறைந்த சம்பளம் என்னும் முரண் இன்றையச் சமூகத்தல் நிலவுகிறது. வேறுவார்த்தைகளில், பணம் உடையவர்கள் மேலும் அதிகம் பணம் பெறுகிறார்கள். ஆனால் ஏழைகள் தங்கள் நிலையிலேயே நீடிக்கிறார்கள். இதை அரசும் இதர நிறுவனங்களும் கட்டுப்படுத்த வேண்டும் என்றுத் திருஅவை அறிவுறுத்துகிறது. 



Post a Comment

0 Comments