இன்றய தினம் Docat எண் 153, இல் காணப்படும் விவாசயம் பற்றிப் பார்க்க இருக்கிறோம்.
விவசாயத்தின்
முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். மனிதர் உண்ண வேண்டுமென்றால்
விவசாயம் நடந்தாக வேண்டும் என்னும் கட்டாயம் உள்ளது. அவர்கள் செய்யும் தொழில்
தான், உலகத்தில் மிக உன்னதத் தொழிலாக மதிக்கப்பட வேண்டும்.
1033 ஆம் குறள் பின்வருமாறு கூறுகிறது.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால்,
மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது என்று
இதற்கு விளக்கம் கொடுக்கலாம். இவ்வளவு உயர்வாக மதிக்கப்பட வேண்டிய விவசாயம் இன்று
கவுரவமற்றத் தொழிலாகப் பார்க்கப்படும் சூழல் நிலவுகிறது. திருத்தந்தை புனித
இரண்டாம் ஜாண் பால் பின்வருமாறு எழுதுகிறார்.
“விவசாயம் என்பது துன்பம் மிக்க வேலை.
அதைச் செய்வோர் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. முழு உடல் உழைப்பையும் கொடுக்க
வேண்டியிருக்கிறது. ஆனால் அவர்கள் செய்யும் தொழிலுக்குப் போதுமான அங்கீகாரம்
கிடைப்பதில்லை. அவர்கள் சமூகத்தன் கீழ்த்தட்டில் வைத்துப் பார்க்கப்படுகிறார்கள்.
அதாவது, விளிம்புநிலை மக்களாகக் கருதப்படுகிறார்கள். இதனால், உயர்தர வாழ்வின் மீது
ஆசை வைத்து, அவர்கள் நகர்புரங்களுக்குச் செல்கிறார்கள். ஆனால் அவ்விடங்களிலோ
அவர்கள், மேலும் மோசமான நிலையை சந்திக்கிறார்கள்.”
உலகில் பல்வேறுத் தொழில்கள் இருந்தாலும், மிக
முக்கியமானத் தொழிலாக விவசாயம் இருக்கிறது. அதைப் பாதுகாக்க வேண்டியது அரசின் மிக
முக்கியமானப் பொறுப்பு. வளர்ச்சியடைந்ததாக மார்தட்டிக் கொள்ளும் நாடுகள் கூட,
விவசாயம் இன்றி வாழ முடியாது. உணவுப் பொருட்கள் என்பது மனிதருக்கு அடிப்படைத்
தேவை.
இந்தியா போன்ற ஏழை நாடுகளில் விவசாயம் செய்பவர்கள்
அடையும் வேதனைகளைப் பற்றி நாம் அறியாதவர்கள் அல்ல. அவர்கள் மத்தியில்
கடன்பிரச்சனைகளால் தற்கொலைகள் பெருமளவு காணப்படுகின்றன. மேலும் விவசாயிகளில்
பலருக்கும் நிலங்கள் சொந்தமாக இல்லை. குறிப்பாக, சமுதாயத்தின் கீழ்த்தட்டிலும்
விளிம்புநிலையிலும் உள்ள மக்களுக்குத் சொந்தமாக நிலம் இல்லை. பெரும்
நிலக்கிழார்களின் கீழ் கூலிக்கு வேலை செய்து அதிலிருந்து கிடைக்கும் குறைந்த
பணத்தில் வாழ்க்கை நடத்துகிறார்கள். பிரித்தானிய அரசு வெளியேறிய போது,
விவசாயிகளுக்கு நிலத்தைப் பிரித்துக் கொடுத்தது என்பது உண்மையே. ஆனால், சாதிய
கட்டமைப்பில் அடிமட்டத்தில் இருக்கும் மக்கள் பெற்றுக் கொண்ட நிலமெல்லாம்,
ஆதிக்கச் சாதியினர் திரும்பவும் சொந்தமாக்கப் பட்டன என்பதை வரலாறு கூறுகிறது.
திருஅவையின் சமூகப் படிப்பினையானது, விவசாயிகள்
நிலத்தைக் கொண்டிருக்க வேண்டிருக்கும் என்பதை வலியுறுத்துகிறது. அத்தகையப்
பகிர்ந்தளிப்பு நடப்பதற்காக, அரசு சட்டங்களைக் கொண்டுவருவதோடு, அதை
நடைமுறைப்படுத்தவும் வேண்டும். விவசாய நில அபகரிப்பு, பூர்வ குடுமக்களின் நில
ஆக்கிரமிப்புப் போன்றவை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலங்கள், பெரும்
கார்ப்பரேட் கம்பெனிகளுக்குக் கொடுக்கப்படுவதையும் நாம் அறிவோம். இதனால்,
வாழ்வாதாரம் இழந்து, சொந்த நிலபுலன்களையும், வாழ்க்கைச் சூழமைவையம் இழந்து வாடும்
மக்கள் இன்று ஏராளம் உள்ளனர்.
உணவின்றி வாழ முடியாது. விவசாயம் இன்றி உணவு கிடைக்காது.
விவாசாயம் செய்பவர்களை இரண்டாம்தர குடிமக்களாகப் பார்க்கும் அவலம் நீங்க வேண்டும்.
அவர்கள் செய்யும் தொழிலானது தரக்குறைவாகப் பார்க்கும் போக்கும் அகல வேண்டும்.
அவர்கள் அளிக்கும் உடலுழைப்பை மதித்து, அவர்களின் நலம் பேணுவதில் அக்கறைக் கொள்ள
வேண்டும்.
0 Comments