Episode 114 DOCAT 53, புலம் பெயர் தொழிலாளர்கள்

இன்றய தினம் Docat எண் 152, இல் காணப்படும் புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றிப் பார்க்க இருக்கிறோம்.

2022 ஆம் ஆண்டு, 2.25 லட்சம் பேர், இந்தியக் குடியுரிமையைத் துறந்து வெளிநாடுகளில் குடியுரிமைப் பெற்றிருக்கிறார்கள். அதாவது இனிமேல் அவர்கள் இந்தியக் குடிமக்கள் அல்ல. இவர்கள், நல்ல வாய்ப்புகள், தரமான சுகதார அமைப்பு, உயர்தர கல்வி போன்றவற்றிற்காகச் சென்றிருக்கிறார்கள். இவர்கள் பணக்காரர்கள். 8.2 கோடிக்கு மேல் வருமானமுள்ளவர்கள், High Net-worth Individuals. சுருக்கமாக HNIs என்று அழைக்கிறார்கள். இது இப்படி இருக்கையில், தமிழ்நாடு கேரளா போன்ற தென் மாநிலங்களை நோக்கி, ஏரளமான கூலித்தொழிலாளர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இது இன்று பெரிய அரசியல் பிரச்சனையாக தமிழ்நாட்டுச் சூழலில் எழுந்துள்ளது. அவர்களை எப்படியாவது தடுக்க வேண்டும் என்னும் குரல்களும் எழுந்த வண்ணம் உள்ளன. மேலும், உள்நாட்டுப் போர் கலவரங்கள் நடந்து வரும், சிரியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கிறார்கள். ஆனால் இவர்கள் தங்கள் நாட்டில் உள் நுழைவதை அந்நாடுகள் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதே வேளையில், பணக்காரர்களை இந்நாடுகள் வரவேற்கின்றன என்பதையும் நாம் அறிந்திருத்தல் நன்று. லட்சக்கணக்கான மக்கள், இங்கிலாந்தில் குடியேறுவதற்காகக் காத்திருக்கிறார்கள். எல்லாரையும் குடியமர்த்த முடியாது என்ற வாதங்களும் ஐரோப்பிய நாடுகளில் உருவாகி இருக்கின்றன. தேர்தல்களை நிர்ணயிக்கும் காரணியாக புலம் பெயர்தல் மாறியிருக்கிறது.

இச்சூழலில் திருஅவை என்ன சொல்கிறது என்பதை நாம் அறிந்திருத்தல் சிறந்தது. பணக்கார நாடு, ஏழை நாடு என்னும் பிளவானது அதிகரித்துக் கொண்டு வருவதை நாம் அறிவோம். பணக்காரர்கள் அதிக பணக்காரர்களாகவும் ஏழைகள் மோசமான ஏழைகளாக மாறுவதும் நாம் அறிவோம். ஏழை நாடுகளில் உள்ளவர்கள், தரமான, நலமான, சுகாதாரனமான வாழ்விற்காக பணக்கார நாடுகளை நோக்கிச் செல்கிறார்கள். இவர்களை நடத்தும் விதத்தில் பாகுபாடுகள் உள்ளன. பணக்கார நாடுகளுக்கு பயன் சேர்க்கும், உயர்தர கல்வி பயின்றோர், தொழிலதிபர்கள் போன்றவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். மற்றவர்கள் புறந்தள்ளப்படுகிறார்கள். இத்தகையப் போக்கு நல்லதல்ல என்பதை திருஅவை வலியுறுத்துகிறது. மேலும் வேலைதேடி வரும் புலம் பெயர் தொழிலாளர்களை, மனித மாண்புடன் நடத்த வேண்டும். அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் போக்கானது தவறானது. அவர்கள் மற்ற மனிதர்களைப் போன்று சமமான மாண்பு மிக்கவர்கள்.

ஆண்டுதோறும் டிசம்பர் 18 ஆம் தேதியானது, உலகளாவிய புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்நாளுக்கானச் செய்தியை திருத்தந்தை ஆண்டுதோறும் அளித்து வருகிறார். 2022 ஆம் ஆண்டுக்கான செய்தியில் திருத்தந்தை பின்வரும் சிந்தனைகளை முன்வைக்கிறார்.

இவ்வுலகில் வாழும் நாம் பயணிகள். விண்ணகத்தை நோக்கி பயணம் செய்யும் மக்களின் கூட்டம். வத்திக்கான் திருச்சங்கம், திருஅவையை பயணத் திருஅவை என்று அழைக்கிறது. எபிரேயர் திருமுகம் 13.14 இல், நிலையான நகர் நமக்கு இங்கே இல்லை; வரப்போகும் நகரையே நாம் நாடிச் செல்கிறோம் என்று கூறுகிறது. இப்படியாக வரவிருக்கும் விண்ணகத்தை நோக்கிப் பயணம் செய்யும் நம் நடுவே விண்ணரசு உள்ளது என்பதை இயேசு கூறியிருக்கிறார். இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது” (லூக் 17.21). அதாவது, விண்ணரசின் விழுமியங்களை முழுமையாக ஏற்றுக் கொள்வோர் ஏற்கனவே, விண்ணரசின் இனிமையை சுவைக்க ஆரம்பிக்கிறார்கள். அவ்வினிமை விண்ணகத்தில் நிறைவு பெறும். ஆகையால், விண்ணகத்தின் விழுமியங்களாக இருக்கின்ற அன்பு, நீதி, இரக்கம் போன்றவற்றை நாம் இவ்வுலகில் வாழ்கையில் செயலாக்க வேண்டும். இவ்வுலகில் பயணிகளாக வாழும் நாம், அன்னியர்களையும், அறியாதவர்களையும் வரவேற்க கடமைப் பட்டிருக்கிறோம். இயேசு, அந்நியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்” (மத் 25.35) என்று கடைசித் தீர்ப்பைப் பற்றிய உரையில் கூறுகிறார். அந்நியரை ஏற்றுக் கொள்ளுதல், அவர்களுக்கு அன்பு காட்டுதல், அவர்களோடு நேர்மையோடு செயல்படுதல், அவர்களை இரக்கமுடன் நடத்துதல் ஆகியவை அனைத்தும் இயேசுவின் கட்டளையின் பகுதியாக இருக்கிறது. இத்தவக்காலத்தில் பின்வரும் இறைவார்த்தைகளை மனதில் கொண்டு நாம் செயல்படுவோம்.

பசித்தோர்க்கு உங்கள் உணவைப்

பகிர்ந்து கொடுப்பதும்

தங்க இடமில்லா வறியோரை

உங்கள் இல்லத்திற்கு

அழைத்து வருவதும்,

உடையற்றோரைக் காணும்போது

அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும்

உங்கள் இனத்தாருக்கு உங்களை

மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ

நான் விரும்பும் நோன்பு!” (எசா 58.7)



Post a Comment

0 Comments