Episode 113 DOCAT 52, வேலை வாய்ப்பில் பெண்களுக்கான உரிமை, குழந்தைத் தொழிலாளர்

இன்றய தினம் Docat எண் 150, 151 இல் காணப்படும் வேலைவாய்ப்பில் பெண்களுக்கான உரிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிப் பார்க்க இருக்கிறோம்.

“”ஆண்கள் கதிரவன் தோன்றி மறையும் வரை வேலை செய்கிறார்கள் ஆனால் பெண்களின் வேலைக்கோ முடிவே இல்லை எனப் பொதுவாகச் சொல்வதுண்டு. நம்முடைய வீடுகளிலும் அம்மா செய்யும் வேலையானது முடிவிலியாகத் தொடர்ந்துக் கொண்டே இருக்கும் என்பதை அறிவோம். இன்று வெளியே வேலைக்குச் செல்லும் பெண்கள் கூட வீட்டிலுள்ள அனைத்து வேலைகளையும் சேர்த்தே செய்ய வேண்டிய சூழலே நிலவுகிறது.

சமூகம் மற்றும் குடும்பத்தைப் பாதுகாப்பதில் பெண்கள் கொண்டிருக்கும் பங்கானது பெரிது. வளர்ச்சியடைந்த நாடுகள் இன்று இந்நிலையை அடைவதற்குக் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதை வரலாறு கூறுகிறது. இன்று பெண்கள் எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகராகத் தங்கள் பங்களிப்பை அளித்து வருகிறார்கள். இதை பெருமளவில் ஊக்குவிக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் வேலை செய்தாலும் அவர்களுக்கு ஊதியம் அளிப்பதில் பாகுபாடு நிலவுகிறது என்பதே உண்மை. இதைப் பல ஆய்வுகள் கூறுகின்றன. இத்தகைய சமமற்ற நிலையானது போக்கப்பட வேண்டும்.

திருஅவையானது வேலைவாய்ப்பில் பெண்களுக்கான உரிமைப் பற்றிப் பேசும் போது, இன்னொரு காரியத்தை முக்கியமாக வலியுறுத்துகிறது. அது தாய்மை. சி.எஸ் லூயிஸ் என்பவர் பின்வருமாறு கூறுகிறார்: “உலகிலுள்ள வேலைகளுள் மிகவும் முக்கியமான வேலை தாயின் வேலை. தாயின் பணிக்கு உதவும் வகையில்தான் மற்ற வேலைகள் அனைத்தும் உள்ளன.” ஆகையால் பெண்களின் பேறுகாலம், அவ்வேளையில் அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய விடுப்பு, குழந்தை வளர்ப்பின் வேளையில் அளிக்கப்பட வேண்டிய சலுகைகள் குறித்து திருஅவை அக்கறையோடு நோக்குகிறது. உயர் மட்டத் தொழில் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் ஆகியவற்றில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஓய்வும், விடுப்பும் கொடுக்கப்படுகிறது எனலாம். ஆனால், அடிமட்டத்தில் பிற கூலி வேலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு இத்தைய சாதகமான சூழல்கள் நிலவுவதில்லை என்பதே உண்மை. இது போக்கப் பட வேண்டும். மேலும், பெண்களின் வேலையானது சுரண்டப்படுகிறது. நீண்ட நேரம் வேலை செய்தும் போதிய ஊதியம் கிடைக்காதச் சூழலானது நிலவுகிறது எனலாம். இதைத் திருஅவை கண்டிப்பதோடு, அரசும் சமூகமும், பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறைக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.

குழந்தைத் தொழிலாளர்கள் இன்றும் சமூகத்தில் உள்ளனர். தொழில் புரட்சியின் காலத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டார்கள் என்பதை வரலாறு கூறுகிறது. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாக் கண்டங்களில் பெருமளவில் நிலவியது. குழந்தைத் தொழில் முறையானது குழந்தைகளில், உடல் வளர்ச்சியையும் அறிவு வளர்ச்சியையும் பாதிக்கிறது. போதுமான வருமானம் வீட்டில் இல்லாதச் சூழலில், பெற்றோர்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது வழக்கம். இதைப் போக்க வேண்டும் என்றால், குடும்பங்கள் வருமானம் பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.    

குழந்தைத் தொழிலும், குழந்தைகளைச் சுரண்டுதலும் அநீதி. அவர்கள் எழுப்பும் குரலானது விண்ணகத்தைச் சென்றடையும் என்று திருஅவை எச்சரிக்கிறது.

என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வோருடைய கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டித் தொங்கவிட்டு ஆழ்கடலில் அமிழ்த்துவது அவர்களுக்கு நல்லது” (மத் 18.6).   



Post a Comment

0 Comments