Episode 112, DOCAT 51, தனிச் சொத்துரிமையும் சமூகக் கடமையும்

இன்றய தினம் Docat எண் 147, 148, 149 இல் காணப்படும் தனிச் சொத்துரிமை மற்றும் சமூகக் கடமை பற்றிப் பார்க்க இருக்கிறோம்

1848 ஆம் ஆண்டு கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரடெரிக் ஏங்கல்ஸ் இணைந்து கம்யூணிஸ்ட் மானிபெஸ்டோ எனும் அறியப்படும் பொதுவுடைமை தத்துவத்தை வெளியிட்டனர். இது பொதுவுடைமை அறிக்கை என அறியப்படுகிறது. பொதுவுடைமை என்னும் சொல் ஆங்கிலத்தில் Socialist என அறியப்படுகிறது. இவ்வறிக்கையானது தனிச் சொத்துரிமையை ஒழித்தது. அதாவது, எவரும் தங்களுக்கென சொத்தைக் கொண்டிருக்க முடியாது என்னும் நிலை. இத்தகைய ஒழிப்பை திருஅவை எப்போதும் ஆமோதித்ததில்லை. தனிச்சொத்துரிமையை திருஅவை ஆதரிக்கிறது. திருஅவை தனிச்சொத்துரிமையை ஆமோதிப்பதால், அது பணக்காரர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது என்று சொல்வது தவறு உலகில் உள்ள அனைத்தும் அனைவருக்குமானது என்பதில் திருஅவை உறுதியாக உள்ளது. சொத்தும், நிலபுலன்களும், இயற்கை வளங்களும் அனைவருக்குமானது. ஒருவர் தனக்கென சொத்தும் பொருளும் கொண்டிருந்தால், அதை அவர் சமூகத்திற்காக பயன்படுத்த வேண்டும். தனிச்சொத்தோடு, பொதுநலமானது கலந்துக் கிடக்கிறது.

குறுகிய மற்றும் நீண்ட கால தனிப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்காகவும் லாபத்திற்காகவும் மக்களின் மீது பொருளை முதலீடு செய்யாமல் இருப்பது மோசமான வணிகம்எனத் திருத்தந்தை பிரான்சிஸ் கூறுகிறார். மக்களின் மீது முதலீடு செய்தல் என்பதை, ஊதிய உயர்வு, ஊழியர் எதிர்கால வைப்பு நிதி, வேலை நிரந்தமாக்குதல் போன்றவற்றில் அடங்கியுள்ளது. ஆனால் இன்று அச்சூழலானது குறைந்து வருவதை நாம் பார்க்கிறோம்.

ஒரு காலத்தில், பொருளாதாரமானது வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும், அரசியலானது, அச்செல்வத்தை அனைவருக்கும் பிரித்துக் கொடுப்பதில் நோக்கம் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. அதாவது செல்வத்தைப் பெருக்குவதில் பொருளாதார நிபுணர்களும், பெரும் முதலாளிகளும் ஈடுபட வேண்டும். ஆனால், அரசும், அரசு அமைப்புகளும் அச்செல்வத்தை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க முயற்சியில் ஈடுபட வேண்டும். ஆனால் இன்று உலகமயமாக்கல் வந்துவிட்டது. பொருளாதாரமானது, தேசிய அரசால் முழுமையாக கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக மாறி விட்டது. வணிகம் இன்று தேசங்களின் வரம்புகளைக் கடந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பணக்காரர்கள் மேன்மேலும் பணம் ஈட்டும் சூழலானது உருவாகி இருக்கிறது. பணக்காரர்கள் மட்டும் வளர்ச்சி அடையும் சூழல் உருவாகி இருக்கிறது. இதற்கு அரசும் உடந்தையாக இருக்கிறது என்று கூற வேண்டும். பெரும் பணக்காரர்களுக்கு வரிக்குறைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்தியா பொருளாதாரத்தில் வல்லரசாக வேண்டும் என்பதற்காக, ஒரு விழுக்காடு மட்டும் வரும் பெரும்பான்மையினருக்கு சாதகமாக அரசு செயல்படுகிறது. இவர்களில் அத்துமீறிய வளர்ச்சியால் இந்தியா பொருளாதாரத்தில் வல்லரசாகும் என்னும் மாயத் தோற்றத்தை அரசு உருவாக்குகிறது. இதனால் ஏழைகள் மிகவும் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மிகப் பணக்காரர்களாகவும் மாறுகிறார்கள்.

மேலும், கல்வி, மருத்துவம் போன்றவைக்காக முன்னர் காலங்களில் அரசானது அதிகம் நிதி ஒதுக்கியது எனலாம். கல்வியும் மருத்துவமும் இலவசமாக கிடைத்தது. ஆனால் இன்று அது வணிகமான போது, அரசு அக்கடமையிலிருந்து மெல்ல விலகத் தொடங்கியது. கல்விக்கும் மருத்துவத்துக்கும் நிதி ஒதுக்குவதைக் குறைத்துக் கொண்டது. இதை நாம் ஒரு உதாராணமாகப் பார்க்கலாம். மேலும் விவசாயம், ஊரக வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு அரசு நிதியை குறைத்துக் கொள்வதை தற்போதும் நாம் காண்கிறோம். 

இப்போக்கு சரியானது அல்ல. இப்போக்கைக் களைய மனித நேயக் குழுக்களும், உலகளாவிய அமைப்புகளும், சேர்ந்து செயல்பட வேண்டும். இதை திருஅவை வலியுறுத்துகிறது.

சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பம் நிலைக்க வேண்டும் என்றால், குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை வேண்டும். செல்வம் ஈட்டவில்லையென்றால் குடும்பமானது கவுரவமான வாழ்க்கை வாழ முடியாது. ஆகையால் குடும்பங்களை கட்டிக் காத்து நற்சமூகத்தை உருவாக்குவதற்காக நாட்டின் செல்வமானது அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.  

  

Post a Comment

0 Comments