Episode 110, DOCAT 49, தொழிலாளரின் முன்னுரிமை

மானிடர் செய்யும் தொழிலும் அதுபோல் வேலையும் மனித மாண்போடு பிணைக்கப்பட்டது. இதைப்பற்றி Docat நூலின் 143 மற்றும் 144 எண்கள் பேசுகின்றன.

வேலை அல்லது தொழிலைப் பெறுத்தவரைக்கும் லாபம், அல்லது அதிலிருந்து கிடைக்கும் ஊதியம் அவசியமானது. தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்கள் லாபத்திற்காகத் தான் வேலையைச் செய்கிறார்கள். அதுபோல அங்கே வேலை செய்யக்கூடியவரும், ஊதியத்திற்காகத் தான் வேலை செய்கிறார். பணம் ஈட்டுதல், செல்வம் சேர்த்தல், தொழிலை மேம்படுத்துதல் போன்றவை வேலையோடு தொடர்புடையவை. இதைப் பற்றிய கவலையானது வணிக உலகின் பகுதியாக இருக்கிறது. ஆனால், திருஅவை, வேலையாளைப் பற்றியக் கவலையை முதன்மைப்படுத்துகிறது. தொழில் நிறுவனங்களிலும், மற்று பொதுத்துறைகளிலும் பணி செய்பவர்கள் அனைவரும் மனிதர்கள். மனிதர்களாக இருப்பதால் அவர்கள் மாண்பு மிக்கவர்கள். கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது, மனிதர்கள் இறப்பதைப் பற்றியச் செய்திகள் நாம் கேட்பதுண்டு. இது கண்டனத்துக்குரியது. மனித கழிவுகளை அகற்றுதல், தூய்மை செய்தல், போன்ற தொழில்கள் அனைத்தும் அவசியமானது. ஆனால், அங்கே வேலை செய்பவர்கள் மனிதர்கள். அம்மனிதர்களின் மாண்பானது காக்கப்பட வேண்டும். ஆகையால் இத்தகையப் பணி செய்பவர்கள் பயிற்சிப் பெற்றவர்களாக, நவீன தொழில் நுட்பக் கருவிகளின் உதவிகளுடன் அப்பணியை மேற்கொள்பவர்களாக இருக்க வேண்டும் என்று திருஅவை வலியுறுத்துகிறது. திருத்தந்தை புனித இரண்டாம் ஜாண் பால் அவர்கள் மனித மாண்பைப் பற்றிப் பேசும் போது, மனித மாண்புப் பற்றிய கிறிஸ்தவ படிப்பினையானது அடிப்படையான நிரந்தரமான அம்சமாக இருக்கிறது. இது, கிறிஸ்தவப் படிப்பினையின் இதயமாக இருக்கிறது என்கிறார்.

பதினொன்றாம் நூற்றாண்டில் ஜெர்மன் நாட்டில் வாழ்ந்த புனித கில்டகார்ட் (1098-1179) என்பவர் தொழிலாளர்கள் நடத்தப்பட வேண்டிய விதம் பற்றிப் பேசுகிறார். உங்களுடைய அதிகாரத்தின் கீழ் உள்ளவர்களை, குறுந்தடியால் அடிப்பதைப் போன்று கடினமானச் சொற்களால் நடத்தக் கூடாது. மாறாக, இரக்கம் கலந்த நீதியின் சொற்கள் மேல் இறையச்சம் எனும் எண்ணையைப் பூசி அவ்வார்த்தைகளால் அவர்களை நடத்துங்கள் என்று கூறுகிறார். ஆகையால் மனிதர்களை இரக்கத்துடனும் அதேவேளையில் நீதியுடனும் நடத்த வேண்டும் என்பது திருஅவையின் போதனையாக இருக்கிறது.

திருத்தந்தை இரண்டாம் ஜாண் பால் அவர்கள் 1981 ஆம் ஆண்டு எழுதிய லெபோரம் எக்சேர்சென்ஸ் (Laborem Exercens) அதாவது வேலை செய்கிறேன்என்னும் திருத்தூது மடலில், தொழிலாளர்களின் முன்னிரிமைபற்றிப் பேசுகிறார். அதாவது, மூலதனத்தை விட தொழிலாளி முன்னுரிமைப் பெறுகிறார் என்பதை வலியுறுத்துகிறார். இதற்குக் காரணம் உண்டு. மூலதனம் அல்லது முதலீடு என்பது புறப்பொருள். ஆனால், வேலை மனிதரோடு பிணைக்கப்பட்டது. அது தனிமனிதரின் மாண்போடு கலந்த ஒன்று. ஆகையால் தொழில் பெருக்க வேண்டும், வணிகத்தில் போட்டிப் போட்டு முன்னேற வேண்டும், போன்றவை எவ்வகையிலும் வேலையாளின் மாண்பை குறைப்பதாக அமையக் கூடாது. அவர்களுக்கான ஊதியம், வேலை நேரம், தரமான தொழில் இடம் போன்றவை அனைத்தும் கொடுக்கப்பட வேண்டும். ஒரு மனிதர், மாண்புடன் நேரத்தைச் செலவிடவும், தொழில் செய்யவும், ஏற்ற இடமும், சூழலும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதை திருஅவை வலியுறுத்துகிறது.

வேலை செய்கிறேன்என்னும் திருத்தூது மடலானது, மூலதனத்தை விட தொழிலாளர்கள் முன்னுரிமைப் பெற்றவர்கள் என்னும் கோட்பாட்டை முன்வைத்தது. காரணம் மூலதனம் ஒரு புறப்பொருள். ஆனால் வேலை என்பது அகப்பொருள். மனித வாழ்வோடும் மாண்போடும் பிணைக்கப்பட்டது.



Post a Comment

0 Comments