Episode 109, DOCAT 48, வர்க்கப் போராட்டம் பற்றிய திருஅவையின் மாற்றுப் பார்வை

இயல்பாகவே ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்திற்கு எதிரானதாக இருக்கும் என்னும் சமூக வாழ்வு பற்றிய புரிதலானது தவறானது. பணக்காரர்களும் ஏழைகளும் இயல்பாகவே விரோதமான மனநிலையுடன் தான் சமூகத்தில் வாழ முடியும் என்னும் புரிதல் சரியானது அல்ல. இத்தகையச் சிந்தனை, அறிவார்ந்த செயலும் அல்ல, உண்மையும் அல்ல. இருவரும் சமூகத்தில் சேர்ந்து பயணிக்க வேண்டியவர்கள் என்னும் புரிதலே உண்மையானது.

என்று திருத்தந்தை பதிமூன்றாம் லியோ அவர்கள் கூறினார்கள். இதைப் பற்றி நாம் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அதாவது, பணக்காரர்கள் அல்லது முதலாளிகள் என்பவர்கள் ஒரு வர்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஏழைகள் அல்லது தொழிலாளிகள் இன்னொரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவ்விரு குழுக்களும் சமூகத்தில் இணைந்து பயணிப்பது சாத்தியமில்லை என்றும் ஒரு புரிதலானது கார்ல் மார்க்ஸ் அவர்கள் கூறினார்கள். இதை வர்க்கப் போராட்டம் அல்லது Class Struggle என்று அழைப்பது வழக்கம். இது கத்தோலிக்க படிப்பினையின் பகுதியாகப் பார்த்திட இயலாது. காரணம், முதலாளிகளும் தொழிலாளிகளும், படைப்பால் கடவுளின் பிள்ளைகள். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு கொடுத்து இணங்கி வாழ்வது இங்கு சாத்தியம் என்பது முக்கியம். தொழிலாளிகள் மனிதர்கள், ஆகையால் மாண்பு மிக்கவர்கள். அவர்களை மாண்புடன் முதலாளிகள் நடத்த வேண்டும். அது போல முதலாளிகள் மனிதர்கள், அவர்களும் மாண்பு மிக்கவர்கள். அவர்களை தொழிலாளிகள் மாண்புடன் நடத்த வேண்டும்.

இதைப்பற்றித் திருந்தந்தை பதிமூன்றாம் லியோ மீண்டும் கூறுகிறார்:

தொழிலாளிகளின்றி மூலதனத்தை, அதாவது Capital ஐ வைத்து எதையும் செய்திட முடியாது. அதுபோல மூலதனம் இல்லாமல் தொழிலாளிகளாலும் எதையும் செய்ய முடியாது.” தொழிலாளிகளும் முதலாளிகளும் இணங்கி வாழ வேண்டியதன் அவசியத்தை திருத்தந்தை பதிவு செய்கிறார்.

இவ்வாறு இணங்கி வாழ்கிறோம் என்னும் போர்வையில், தொழிலாளிகளை வஞ்சித்து முதலாளிகள் மட்டும் அதீத வளர்ச்சி அடைவதை திருஅவை வன்மையாக எதிர்க்கிறது என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

கார்ல் மார்க்ஸ் கொண்டு வந்த வர்க்கப் போராட்டம் பற்றிய கருத்தானது, வரலாற்றில் பல தாக்கங்களை ஏற்படுத்தியதோடு, தொழிலாளிகளின் உரிமைகளைக் காப்பதற்கான பல வகைகளில் வழி செய்தது என்னும் உண்மையை மறக்க இயலாது. ஆனால், முதலாளிகளை அழித்து, தொழிலாளிகளின் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்னும் போக்கானது பெரும் சிக்கல் மிக்கதாக மாறியது. இது இருபதாம் நூற்றாண்டில் அரங்கேறியது. தொழிலாளிகளின் ஆட்சியை ஏற்படுத்துவதற்காக, வன்முறைப் பயன்படுத்தப்பட்டதோடு மனித உரிமைகள் நசுக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். மக்கள், அரசின் அடிமைகள் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதைப்பற்றி Docat நூலின் 142 ஆவது எண்ணில், திருஅவையின் சமூகப் படிப்பினைக்கும், மார்க்சியத்திற்கும் இடையேயான வேறுபாடு என்ன?” என்னும் கேள்வியின் கீழ் விளக்கப்பட்டுள்ளது.

ஒரு முக்கியமான விஷயத்தை நாம் மனதில் கொள்ளுவது அவசியம். வேலை, பணம் ஈட்டுதல் போன்றவை அனைத்தும் மனிதருக்காகவே என்னும் அடிப்படை நிலையை மறக்கக் கூடாது. திருத்தந்தை இரண்டாம் ஜாண் பால் இதைப் பற்றிக் கூறுகிறார். தொழிலின் நோக்கம் என்ன என்னும் கேள்வியை எழுப்புகிறார். தொழில் மனிதரை நோக்கமாகக் கொண்டுள்ளது. மனிதரின் நல்வாழ்விற்காகவும், உரிமை வாழ்விற்காகவும் தொழில் அவசியம். தொழிலுக்காக மனிதர் படைக்கப்படவில்லை. மனிதரை பண்டமாக மாற்றி, அவர்களின் உழைப்பைப் பிழிந்து, தொழில் அபிவிருத்திச் செய்தல் மட்டுமே நோக்கமாகக் கொண்டால் அது சரியானது அல்ல. 



Post a Comment

0 Comments