Episode 108, DOCAT 47, தொழிலாளர் சாசனம்

DOCAT நூல் 140, 141 ஆவது எண்கள் தொழில்புரட்சியால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட இழிநிலை குறித்தும், அதைப் போக்க திருச்சபை முன்னெடுத்த போதனைகளைப் பற்றியும் கூறுகிறது. இதைப் பற்றி நாம் பார்க்க இருக்கிறோம்..

எளிய உணவே ஏழைகளுக்கு உயிர்; அதை அவர்களிடமிருந்து பறிப்பவர்கள் இரத்த வெறியர்கள். அடுத்தவர் பிழைப்பைக் கெடுப்பது அவர்களைக் கொல்வதாகும்; கூலியாளின் கூலியைப் பறிப்போர் அவர்களது குருதியையே சிந்துகின்றனர்என்று திருவிவிலியத்தில் சீராக்கின் ஞானம் 34 ஆம் அதிகாரம் 21 மற்றும் 22 ஆவது இறைவார்த்தைகள் கூறுகின்றன. இத்தகையதொரு நிலையானது 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்டது. கிராமப்புறங்களில் விவசாயம் செய்தும், கால்நடைகளைப் பேணியும் வாழ்வை நடத்தி வந்த மக்களின் மத்தியில் அறிவியல் வளர்ச்சியில் வெளிப்பாடாக புதிய தொழிற்சாலைகள் வரத்தொடங்கின. தொழிற்சாலைகள் வந்ததும், முக்கிய இடங்கள் எல்லாம் நகரங்களாக மாறின. நகரங்களில் நல்வாழ்வு அமையும் என்னும் எதிர்நோக்குடன், கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களை நோக்கி படையெடுத்தனர். மக்கள் பெரிய தொழிற்சாலைகளில் பணியமர்த்தப்பட்டனர். ஆனால், தொழிலாளிகளின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. உழைக்கும் வர்க்கம் என்று அழைக்கப்பட்ட இவர்கள், மனித நேயமற்ற முறையில் நடத்தப்பட்டனர். இரவு பகல் என எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி வேலை வாங்குதல், தங்குவதற்கு ஏற்ற வசதிகளை இல்லாமை, ஆரோக்கியமற்றச் சூழல் என மிகவும் மோசமான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். உழைப்பைச் சுரண்டுபவர்களாக, முதலாளிகள் மாறினர். இதனால் மக்கள் பெரும் அவதியுற்றனர். நல்வாழ்வு தேடிச் சென்ற மக்கள் தரம் தாழ்ந்த இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டனர். உள்ளவர்கள்,’ ‘இல்லாதவர்கள்என்னும் இரு வேறு வர்க்கங்கள் உருவாகின. உள்ளவர்கள் இல்லாதவர்களை சுரண்டுபவர்களாக மாறினர். இதற்கு எதிரான தொழிலாளர் புரட்சிகளும், அமைப்புகளும் தோன்றத் தொடங்கின.

திருஅவை இவ்வேளையில் முதன்முதலாக, சமூகப் பிரச்சனைக்குறித்துப் பேச ஆரம்பித்தது. பல ஆயர்கள் மக்களுக்கு ஏற்பட்ட துர்கதி பற்றிப் பேசினர். அன்றைய திருத்தந்தை பதிமூன்றாம் லியோ, ரேரும் நொவாரும் என்னும் திருத்தூது மடலை 1891 ஆம் ஆண்டு வெளியிட்டார். இது தமிழில் தொழிலாளர் சாசனம்என்னும் பெயரில் அறியப்படுகிறது. உள்ளவர்கள் இல்லாதவர்கள் என்னும் வர்க்கப்பிரிவினையை திருஅவை கடுமையாக கண்டித்தது. தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம் கொடுக்கும் நிலையை கண்டித்தது. போதிய வசதிகளின்றி தொழிலாளர்களை நடத்தியதைப் பற்றி எச்சரித்தது. மனித நேயமற்ற முறையில் மனிதர்களை நடத்தும் போக்கைக் கண்டு, அதை மாற்றுவற்காக அறைகூவல் விடுத்தது. ஏழை பணக்காரர் என்னும் வர்க்கப் போராட்டத்துக்குக் காரணமாக அமைந்த, தொழிலாளர் சுரண்டலை போக்க வேண்டுகள் விடுத்தது. ஆனால் இதன் மத்தியில் புதிய புரட்சிகளும் புதிய சித்தாந்தங்களும் தோன்றின. செல்வர் ஏழை என்னும் இருவர்க்கங்கள் உருவாக்கப்பட்டு, அதைப் பற்றிய கருத்தியல்களும் வெளியாயின. இரு வர்க்கங்களும் நிரந்தரமாக போராடும் களமாக சமூகம் இருக்கிறது என்று இக்கருத்தியல் கூறியது. இச்சிந்தனை குழப்பத்தைப் போக்கும் விதத்தில் திருத்தந்தை பேசினார்.

திருத்தந்தை பதிமூன்றாம் லியோ இவ்வாறு எழுதினார்:

இயல்பாகவே ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்திற்கு எதிரானதாக இருக்கும் என்னும் சமூக வாழ்வு பற்றிய புரிதலானது தவறானது. பணக்காரர்களும் ஏழைகளும் இயல்பாகவே விரோதமான மனநிலையுடன் தான் சமூகத்தில் வாழ முடியும் என்னும் புரிதல் சரியானது அல்ல. இத்தகையச் சிந்தனை, அறிவார்ந்த செயலும் அல்ல, உண்மையும் அல்ல. இருவரும் சமூகத்தில் சேர்ந்து பயணிக்க வேண்டியவர்கள் என்னும் புரிதலே உண்மையானது.

நிலங்களை வைத்திருப்பவர்கள், பெரும் நிறுவனங்களை வைத்திருப்பவர்கள் போன்றோர், தொழிலாளிகளை அடிமைகளாகப் பார்த்தல் மனித நேயமற்றச் செயல் என்பதை திருஅவை தெளிவாக உரைத்தது. உள்ளவர்களும் இல்லாதவர்களும் கடவுளின் முன்னிலையில் சம மாண்புடன் வாழ்வதற்காக அழைக்கப்பட்டவர்கள். ஒருவர் தொழிலாளியாக இருப்பதால் அவர் எவ்விதத்திலும் மாண்பை இழப்பதில்லை. அவருக்குக் குடும்பம் உண்டு, மனித உணர்ச்சிகள் உண்டு, வாழ்வதற்கான உரிமை உண்டு. ஆகையால், முதலாளிகளாக இருப்பவர்கள், மனித நேயத்துடன், தொழிலாளர்களை நடத்தி, ஒருவர் மற்றவருடன் ஒத்துழைத்து சம மாண்புடன் வாழ அழைக்கப்படுகிறார்கள் என்பதை திருஅவை வலியுறுத்தியது. அல்லாமல், முதலாளிகள் எப்பொழுதும் தொழிலாளிகளுக்கு எதிராகவே இருப்பார்கள் என்று கூறி அவர்களை அழிக்கும் செயலில் ஈடுபடுதல் தவறானது என்னும் புரிதலை திருத்தந்தை பதிமூன்றாம் லியோ முன்வைத்தார்.

எத்தொழில் செய்கிறோம் என்பதல்ல முக்கியம், எத்தகைய அன்புடன் அதைச் செய்கிறோம் என்பதே முக்கியம். அதையே கடவுள் நோக்கிப் பார்க்கிறார்என்று புனித ஆவிலா தெராச கூறுகிறார்.



Post a Comment

0 Comments