Episode 107, DOCAT 46, ஞாயிறு திருப்பலி, வேலை

அன்பான இளையோர்களே, இன்றைய தினம் நாம் DOCAT நூலிலிருந்து 139 ஆவது எண்ணில் ஞாயிற்றுக் கிழமையை அனுசரிப்பதைப் பற்றியும் அது வேலையோடு கொண்டிருக்கும் தொடர்பு பற்றியும் கூறியிருப்பதைப் பற்றிப் பார்க்க இருக்கிறோம்.

ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு பத்துக் கட்டளைக் கொடுத்தார். அவற்றுள் முதல் மூன்றும் தனிமனிதர் கடவுளுக்கு நேரடியாக காட்ட வேண்டிய கீழ்ப்படிதலைப் பற்றிப் பேசுகிறது. இதில் மூன்றாவது கட்டளை: “ஓய்வு நாளை தூயதாய்க் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. என்று கூறுகிறது. இறைவார்த்தை இவ்வாறு கூறுகிறது: “ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய். ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு, ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார்” (விப 20: 8-11). கடவுள் ஓய்வு நாளை ஏற்படுத்தியதோடு அதை அனுசரிக்க வேண்டும் என்றும் அவர் கட்டளை இட்டார். அந்நாளை ஆசியால் நிரப்பியதாகவும் இறைவார்த்தைக் கூறுகிறது.

புதிய ஏற்பாட்டில், இயேசு ஓய்வு நாளான சாபத்து அன்று தொழுகைக் கூடத்திற்கு தவறாமல் சென்றிருந்தார் என்றும், இறைவார்த்தை வாசித்தார் என்பதையும் நாம் லூக்கா நற்செய்தியில் பார்க்கிறோம். இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார்” (லூக் 4:16). அது மட்டுமல்லாமல் இயேசுவின் பெற்றோர் ஆண்டுதோறும் பாஸ்கா விழாவைக் கொண்டாடுவதற்காக எருசலேம் செல்வார்கள் என்பதை இறைவார்த்தைக் குறிப்பிடுகிறது. அது மட்டுமல்லாமல் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது. ஒவ்வொரு ஞாயிறும் இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறிக்கும் நாளாகவும் அது ஆண்டவரின் நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. ஆகையால், திருப்பலியில் பங்கேற்க வருகின்றவர்கள், தங்களுடைய ஒரு வார கால இன்பங்களையும், துன்பங்களையும், கவலைகளைகளையும் ஏக்கங்களையும் பலிப்பீடத்தில் ஒப்புக்கொடுத்து, ஒவ்வொரு ஞாயிறும் இயேசுவோடு சேர்ந்து புது வாழ்வுக்கு உயிர்த்தெழுகிறார்கள். ஆகையால் கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரைக்கும் ஞாயிற்றுக் கிழமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது.

இவ்வாறாக கடவுளுக்கான தினமாக இதை அனுசரிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதோடு, ஓய்வு நாள் மனித மாண்போடு தொடர்புடையதாகவும் இருக்கிறது. மனிதர்கள், வேலைக்கு அடிமையாக மாறுவற்காக அழைக்கப்படவில்லை. வேலை என்பது மனிதரின் வாழ்வை மேம்படுத்துதவற்காகவே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. வேலை அதிக முக்கியத்துவம் பெற்று, முதலாளிகள் தொழிலாளிகளை சுரண்டும் அமைப்பாக மாறும் ஆபத்து, தொழிற்புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்டது. கொத்தடிமைகளாக்கி வேலை வாங்குதல், ஓய்வின்றி வேலை செய்ய நிர்பந்திக்கப்படுதல், அதிகம் வேலை வாங்கிச் சுரண்டுதல் போன்றவை அனைத்தும் மனித மாண்புக்கு எதிராக இருக்கிறது. ஆகையால், வாரத்திற்கு ஒருமுறை ஓய்வெடுத்து, மனித வாழ்வின் அர்த்தத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்துவதற்கு ஓய்வு நாள் முக்கியம். கடவுளை அறிந்து அன்பு செய்து நற்செயல்கள் செய்து வாழ்ந்து விண்ணகம் செல்வதற்காக படைக்கப்பட்டிருக்கும் மனிதரை வேலை வழியாக அடிமைகளாக்கும் போக்கு நிலை உகந்ததல்ல. ஆகையால் ஓய்வு நாள் மனித மாண்போடு தொடர்புடையதாக இருக்கிறது.

இன்று சோம்பல், விசுவாசக்குறைவு, ஆர்வமின்மை ஆகியவற்றால் இளையோருள் பலர் ஞாயிற்றுக் கிழமை கோயிலுக்குச் செல்வதை தவிர்க்கிறார்கள். இத்தகைய நிலை நல்லதல்ல. நம்மைப் படைத்தவர், நமக்கென ஒரு இலக்கை தந்துள்ளார். அவ்விலக்கைப் பற்றி அறிந்துக் கொள்ளவும், நாம் இயந்திரங்கள் அல்ல, மாண்புடன் படைக்கப்பட்ட மனிதர்கள் என்பதை அறஇந்து அதற்கேற்ப சுய கவுரவத்துடன் வாழவும் ஞாயிற்றுக் கிழமையும் திருப்பிலும் அவசியம்.

கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கப் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?” (உரோ 8:35).

கிறிஸ்துவோடு நாம் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தும் நன்னாள் ஞாயிறு. திருப்பலியில் தவறாது முழுமையாய் பங்கேற்போம்.



Post a Comment

0 Comments