Episode 105, DOCAT 44, வேலையும் மனித மாண்பும் - 3

அன்பான இளையோர்களே, இன்றைய தினம் நாம் DOCAT நூலிலிருந்து 137 மற்றும் 138 ஆவது எண்களில் வேலையைப் பற்றிக் கூறியிருப்பதை பார்க்க இருக்கிறோம்.

ஆண்டவராகிய கடவுள் மனிதரைப் படைத்து, ஏதேன் தோட்டத்தில் அமர்த்தி, அதைப் பேணவும் பண்படுத்தவும் பணித்தார் என்றும், வேலை செய்யும் போது மானிடர் கடவுளின் படைப்புப் பணியில் பங்கேற்கிறார் என்றும் கடந்த இரண்டு அத்தியாயங்களிலாகப் பார்த்தோம்.

புதிய ஏற்பாடு என்பது ஆண்டவராகிய இயேசுவின் போதனைகள், செயல்பாடுகள், வாழ்க்கை ஆகியவற்றை மையப்படுத்தியதாக அமைந்தது என்பதை நாம் அறிவோம். இயேசுவைப் பற்றி, பாவம் தவிர்த்து எல்லாவற்றிலும் நம்மைப் போன்று மாறியவர்என கி.பி. 451 ஆம் ஆண்டு நடந்த கால்சிடோன் என்னும் திருச்சங்கம் கூறுகிறது. மானிடரின் எல்லாக் காரியங்களிலும் ஆண்டவராகிய இயேசுப் பங்கேற்றார். அவ்வகையில், இயேசு ஒருத் தொழிலைச் செய்து வந்தார் என்பதை நாம் நற்செய்தியில் காண்கிறோம். இவர் தச்சர் அல்லவா!என மாற்கு நற்செய்தி ஆறாவது அதிகாரம் 3 ஆவது வசனத்தில் பார்க்கிறோம். இயேசு தன்னுடைய வளர்ப்புத் தந்தையாக இருந்த யோசேப்பு செய்து வந்த தச்சுத் தொழிலைக் கற்று அதை 30 ஆண்டுகாலம் செய்து வந்தார் என்பதை நற்செய்தி நூல்களும் தெளிவுப்படுத்துகிறது.

இயேசுவின் போதனைகளில் மக்கள் செய்து வந்த தொழில்கள் முக்கியமான இடத்தை வகித்தன. விவசாயிகள், திராட்சைத் தோட்டத்தில் பணி செய்பவர்கள், மீன் பிடிப்பவர்கள், அத்திமரத்தைப் வளர்ப்பவர்கள் என இயேசுவின் போதனைகள் மக்கள் செய்து வந்தப் பணிகள் இடம் பெற்றன. அது மட்டுமல்லாமல், கடவுள் தங்களுக்குக் கொடுத்தத் திறமையைப் பயன்படுத்தி உழைத்து அதைப் பெருக்கிய மனிதர்களை அவர் வெகுவாகப் பாராட்டுகிறார். இதை நாம் மத்தேயு நற்செய்தி 25 ஆம் அதிகாரம் 14 முதல் 30 வரையிலான வசனங்களில் பார்க்கிறோம். இயேசு வேலை செய்தார், அத்தோடு வேலை செய்பவர்களையும் பிற தொழில்களைச் செய்பவர்களையும் அவர் பாரட்டிப் பேசினார். இயேசு திருத்தூதர்களை அழைத்தப் போதும், சோம்பேறிகளாக இருந்தவர்களை அழைத்ததாக நாம் திருவிவிலியத்தில் பார்க்க முடியாது. மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள், வரிதண்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் போன்றவர்களை அழைக்கிறார்.

அதே வேளையில் வேலையே வாழ்வு என வாழ்வதைப் பற்றித் திருஅவை எச்சரிக்கை செய்கிறது. வேலைக்கு அடிமையானவர்களை, Workaholic என்று ஆங்கிலத்தில் சொல்வர்கள். Alcoholic என்றால் குடிமைக்கு அடிமையானவர்கள். அது போல வேலைக்கு அடிமையானவர்களும் உண்டு. ஞாயிற்றுக் கிழமைக் கூட வேலை செய்பவர்கள் உண்டு. திருப்பலியில் பங்கேற்காமல் வேலை செய்பவர்கள், அன்றாடம் மாலை செபங்களை குடும்பத்தோடு சேர்ந்து செபம் செய்யாமல் வேலை செய்யபவர்கள், குழந்தைகளோடும் கணவன் அல்லது மனைவியோடு நேரம் செலவிடாமல் வேலையென்றே வாழ்பவர்களை நாம் பார்க்க முடியும். இத்தைகய நிலை ஏற்படக் கூடாது என் திருச்சபை அறிவுறுத்துகிறது.

மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்” (மத் 6:19-21) என இயேசு கூறுகிறார். ஆகையால் அழியாச் செல்வம் விண்ணகத்தில் சேர்த்து வைக்க வேண்டும் என நற்செய்தி அறிவுறுத்துகிறது.

வேலை என்பது நமக்குத் தேவையான பொருட்களை வாங்கவும், நம்முடைய வாழ்வை எளிதாக்குவதற்காகவுமே அமைய வேண்டும். பொருள் சேர்ப்பது ஒன்றையே கடமையாகக் கொண்டால் வாழ்வு அர்த்தம் இழந்து விடும். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” (லூக் 12:15) என இயேசு எச்சரிக்கிறார். ஆகையால், மனநிறைவான மகிழ்ச்சியான வாழ்வு, கடவுளோடு காட்டும் அன்பு, குடும்பத்தில் வெளிப்படுத்தப்படும் அன்பு, அவர்களோடு செலவிடும் பொழுதுகள், அர்த்தமிக்க உரையாடல்கள், குழந்தைகளோடு விளையாடும் பொழுதுகள் போன்றவற்றால் அமைகிறது. வாழ்வுக்காகவே வேலை, வேலைக்காக அல்ல வாழ்வு என்பதை நினைவில் கொண்டு செயல்படுவோம்.




Post a Comment

0 Comments