Episode 105, DOCAT 44, வேலையும் மனித மாண்பும் - 2

அன்பான இளையோர்களே, இன்றைய தினம் நாம் DOCAT நூலிலிருந்து 135 மற்றும் 136 ஆவது எண்களில் வேலையைப் பற்றிக் கூறியிருப்பதை பார்க்க இருக்கிறோம்.

கல்லைச் செதுக்கிக் கொண்டிருந்த மூன்று சிற்பிகளிடம் நீங்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார் என்று ஒருவர் கேட்டார். அதற்கு ஒருவர், நான் கல்லை செதுக்கிக் கொண்டிருக்கிறேன்என்றார். இரண்டாமவர் சொன்னார், நான் ஜன்னலுக்கான அலங்கார வளைவை செய்து கொண்டிருக்கிறேன்என்றார். மூன்றாவரோ, நான் பேராலயம் கட்டிக் கொண்டிருக்கிறேன்என்றார்.

அன்பான இளைஞர்களே, இக்கதையில் வரும் மூவரும் ஒரே வேலையைத் தான் செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணங்கள் வித்தியாச் படுகின்றன. பேராலயத்தை கட்டி எழுப்புதில் ஈடுபட்டிருக்கும் மூவருள் மூன்றாமவர் தன்னுடையை வேலையைப் பற்றிப் பெருமையாகக் கருதினார். அவர் கல்லொன்றை செதுக்கினாலும், அது பேராலயத்தின் பகுதியாக மாறப் போகிறது என்னும் உயர்ந்த எண்ணம் அவருக்குள் இருந்தது. இது ஆழமான இறையியல் சிந்தனை உடையது. இவ்வுலக உருவாக்கியவர் கடவுள். இந்த உலகை பராமரிப்பதற்கும், பேணுவதற்கும், புதியன உருவாக்குவதற்கும் என மனிதர்களை நியமத்திருக்கிறார். அவரவர் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் சிறிதும் பெரிதுமானப் பொறுப்புகளை சரிவரச் செய்யும் போது, அவர் கடவுளின் பணியில் பங்கேற்கிறார்.

மார்ட்டின் லூதர் கிங் இவ்வாறு எழுதுகிறார்: “ஒருவர் வீதிகளை துப்பரவு செய்வதற்கான அழைப்பைப் பெற்றிருக்கிறார் என்றால்,  அவர் எழில் மிக்க சிற்பங்களை செதுக்கிய மைக்கில் ஆஞ்சலோ போலவும், இனிமைமிகு பாடல்களை உருவாக்கிய பெத்தோவான் போலவும், அழியா காவியங்களை படைத்த வில்லியம் ஷேக்ஸ்பியரைப் போலவும் துப்புரவுப் பணியைச் செய்ய வேண்டும். நீங்கள் வீதிகளை தூய்மை செய்யும் விதத்தைப் பார்த்து விண்ணக தூதர்கள், இதோ இங்கே, தனது பணியை செம்மையாய் நிறைவேற்றிய ஒப்பற்ற தூய்மைப் பணியாளர் ஒருவர் வாழ்ந்து வந்தார்என்று கூறுவர்.

செய்யும் தொழிலில் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்னும் செய்தி புலனாகிறது. இந்தியா போன்ற நாடுகளில், சாதிய கட்டமைப்பின் மூலம், சிலர் சாதியினர் சில குறிப்பிட்ட பணிகளை மட்டுமே செய்ய வேண்டும் என்னும் போதனையை நாம் கேட்பதுண்டு. அது கிறிஸ்தவ நம்பிக்கை அல்ல. நாட்டை ஆளும் மந்திரியின் மகன் நாளை துப்புரவுப் பணியாளர்களாக மாறலாம், துப்புரவுப் பணியாளரின் மகன் நாளை மருத்துவராகவோ, மாவட்ட ஆட்சியாளராகவோ மாறலாம். எப்பணியானாலும் அது கடவுளின் பணி என்னும் மனநிலையில் செய்ய நாம் அழைக்கப்படுகிறோம்.

சில வேளைகளில் வேலை என்பது கடவுள் மனிதருக்கு அளித்த தண்டனையாகப் பார்ப்பதுண்டு. திருவிவிலியம் கூறுகிறது, ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்” (தொநூ 2: 15). ஆக தோட்டத்தைப் பண்படுத்துதலும் பாதுகாத்தலும் மனிதரிடம் கடவுள் ஒப்படைத்த பணியாக இருக்கிறது. அதனால், வேலை செய்தால் தான் உலகைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் முடியும் என்பது உண்மை. ஆனால், முதல் பெற்றோர் கடவுளுக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்த போது, நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய்” (தொநூ 3:19) எனக் கடவுள் கூறுகிறார். கடினமாக உழைக்க வேண்டும் என்றும், வருந்தி வேலை செய்ய வேண்டும் என்றும் கடவுள் கூறுகிறார். பாவம் மூலம், வேலை ஒரு சுமையாக மாறியது என்னும் அர்த்தத்தில் தான் கடவுள் பேசினார். இன்றும் வேலை செய்வதில் சோம்பல் ஏற்படுவதுண்டு. வருந்தி உழைப்பதில் ஆர்வம் இருப்பதில்லை. இவை பாவத்தின் விளைவு என்பதே விவிலியம் சொல்லும் செய்தியாக இருக்கிறது.

அனைவரும் உழைக்க வேண்டும் என்பதே கடவுளின் கட்டளை. உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது” (2 தெச 3:10) என்று பவுல் கூறுகிறார்.

ஒருவர் செய்கின்ற வேலையானது அவரது குணத்தை மாண்புடையதாக்கிறது என்று ஜாண் ஹார்டன் என்பவர் கூறுகிறார்.

செய்யும் வேலையை புனிதமென நினைத்து ஈடுபடுவோம். குறிப்பாக, உலகின் வளர்ச்சிக்காகவும், அதன் நலனுக்காகவும் உழைக்க வேண்டியது ஒவ்வொருவருடையவும் கடைமையாக இருக்கிறது. தீவினை செய்யும் போது அவர் தீயவனின் பணியாளராக மாறி, உலகை அழிவை நோக்கி நடத்துகிறார். நன்மை செய்யும் போது அவர் கடவுளோடு இணைந்து அவரின் படைப்புப்பணியில் பங்கேற்கிறார்.

வேலை, தனி மனிதருக்கும் மானிட இனம் முழுமைக்கும் நல்லதையேத் தரும். அதன் வழியாக ஒருவர் உலகை உருமாற்றுகிறார். வேலை வழியாக அவர் வாழ்வுக்குத் தேவையானவற்றை சொந்தமாக்குவதோடு, பெரும் மனநிறைவையும் அடைகிறார்.  மனிதம் படைத்த நல்ல மனிதர் என்னும் பெருமிதத்தையும் அவர் உள்ளத்தில் அனுபவிக்கிறார்என்று புனித இரண்டாம் ஜாண் பால் அவர்கள் கூறுகிறார்கள்.

வேலை செய்வோம். அதை மனநிறைவோடு செய்வோம். கடவுளின் பணியாக ஏற்றுச் செய்வோம். நமது மாண்பு உயரும். குணத்தை நல்லதாக மாறும். நாமும் பயன்மிக்கவர்கள் என்னும் உணர்வு ஏற்படும். வாழப் பிடிக்கவில்லை என்னும் எண்ணம் முடிவுக்கு வரும்.



 

Post a Comment

0 Comments