Episode 104, DOCAT 43, வேலையும் மனித மாண்பும்

அன்பான இளையோர்களே, இதுவரை நாம் DOCAT நூலிலிருந்து கீழ்வரும் ஐந்து காரியங்களைப் பற்றி பார்த்தோம்

1.   முதலாவதாக நம்மைப் பற்றிய கடவுளின் அன்பின் திட்டம்,

2.   இரண்டாவதாக, ஒற்றுமையின் ஆற்றல். அதாவது திருஅவையின் சமூப் பணி

3.   மூன்றாவதாக, மனித மாண்பு. அதாவது, மானிடர் ஒவ்வொருவரும் கடவுளின் உருவில் படைக்கப்பட்டுள்ளனர். ஆகையால் அனைவரும் சமமானவர்கள்.

4.   நான்காவதாக, திருஅவையின் சமூகப் படிப்பினையின் அடிப்படைக் கோட்பாடுகளான பொதுநலம், ஆளுமை, தோழமை, துணைநிலை அமைப்பு

5.   ஐந்தாவதாக குடும்பம் என்பது சமூகத்தின் அடிப்படை அலகு

இவ்வாறாக ஐந்து காரியங்களைப் பற்றிப் பார்த்தோம். நாம் இனிப் பார்க்க இருப்பது, வேலையும் கடவுளின் அழைப்பும்.

நம்முள் பலர் படித்து முடித்த உடன் வேலை தேடுவது வழக்கம். கிடைக்கும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்னும் எண்ணம் தான் பல வேளைகளில் மேலோங்கி இருக்கிறது. இவ்வாறாக ஒரு பழமொழி கூறுகிறது: “உங்கள் மனதுக்குப் பிடித்தமான வேலையைத் தேர்ந்தெடுங்கள். பிறகு ஒவ்வொரு நாளும் வேலை செய்யவேண்டிய தேவை இருக்காது.” இப்பழமொழி என்ன கூறுகிறது என்றால், நமக்குப் பிடித்தமான ஒரு வேலையை நாம் தேர்ந்தெடுக்கும் போது, அது நமது இதயத்துக்குப் பிடித்தமானதாக மாறி விடுகிறது. பிறகு வேலை என்பது ஒரு சுமையாக மாறாது, மாறாக அது ஒரு மனநிறைவின் செயலாக மாறும். ஆக வேலைத் தேர்ந்தெடுக்கும் போது, அது நமது மனதுக்குப் பிடித்தமானதாக இருக்கிறதா?. என் உள் மன ஆழத்தில் இருக்கும் ஆசைகளின் வெளிப்பாடு தானா? என பரிசோதித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

DOCAT நூலின் 134 ஆவது எண்ணில் வேலை எதற்காக நாம் தேர்ந்தெடுக்கிறோம்? நாம் ஏன் வேலை செய்ய வேண்டும்? மனித வாழ்வுக்கும் வேலைக்குமானத் தொடர்பு என்ன? என்பதைப் பற்றிப் பேசுகிறது. நாம் முக்கியமான ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இன்றைய இளையோரில் பலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம்; நல்லா சாப்பிடணும் ஜாலியா இருக்கணும். ஜாலி என்று இங்குக் குறிப்பிடுவது, மகிழ்ச்சி அல்லது மனநிறைவு. மகிழ்ச்சி என்பது நாம் இச்சமூகத்தற்கு பயன்மிக்கவர்களாக இருக்கிறோம் என்னும் அடிப்படை உணர்வின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். இல்லையென்றால், வாழ்வு பயனற்றதாய்த் தோன்றும். அப்படி நமது வாழ்வானது சமூகத்திற்கு பயன்மிக்கதாக மாற வேண்டும் என்றால், நாம் இச்சமூகத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டும். இதையே நாம் வேலை என்று சொல்கிறோம். இந்த நாட்டை ஆளும் பிரதமர் தொடங்கி, துப்புரவு வழியாக நாம் தூய்மையாக இருக்க உதபுவர்கள் வரை அனைவரும் இச்சமூகத்திற்காக சேவை செய்கிறார்கள். அதனால், அவர்கள் மனநிறைவு அடைகிறார்கள். அதுபோல சமூகத்திற்கு பயன்மிக்க காரியங்களை செய்கிறேன் என்னும் உணர்வு தன்னைப் பற்றிப் பெருமையாக நினைத்துக் கொள்ள உதவுகிறது. அது மட்டுமல்லாமல், அவர் சமூகத்திற்காக செய்யும் சேவைக்கு கைம்மாறாக, ஊதியத்தையும் பெற்றுக் கொள்கிறார். இதன் வழியாக தனது தேவைகளையும், தனது குடும்பத்தின் தேவைகளையும் ஒருவர் நிவர்த்திச் செய்கிறார். தன்னுடைய சுய உழைப்பால் சம்பாதிக்கும் பணத்தை வைத்து, யார் முன்னிலையிலும் கையேந்தாமல் தனது வாழ்வை நடத்துகிறார். இது அவருடைய மனதிற்குள் பெருமிதத்தை உருவாக்குகிறது. இதையே நாம் மனித மாண்பு என்று கூறுகிறோம்.

இது மட்டுமல்லாமல் ஒருவர் வேலை செய்யும் போது, அவர் கடவுளின் படைப்புப் பணியில் பங்கேற்பவராக மாறுகிறார். தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தார் என்று நாம் வாசிக்கிறோம். கடவுள் அவற்றை, மனிதர்கள் மற்றும் பிற உயிரிகள் வாழ்வதற்காக உருவாக்கினார். அதாவது பிறருக்குப் பயன்பட வேண்டும் என்று அவர் உருவாக்கினார். இப்படியாக உருவாக்கப்பட்ட மண்ணகத்தைப் பண்படுத்தவும், அதை விளைச்சல் மிக்கதாகவும், பிற மனிதர்களுக்கு பயன்மிக்கதாகவும் மாற்ற கடவுள் மனிதரை அழைக்கின்றார். கடவுள் படைத்த இந்தப் பூமியில் விவசாயம் செய்து அதை உணவாக, பிற மனிதர்களுக்குக் கொடுக்கும் ஒரு விவசாயி கடவுளின் படைப்புப் பணியில் பங்கேற்கிறார். இச்சமூகம் நெறிதவறிச் செல்லாமல், நற்சிந்தனைகளோடு, நெறிமிக்க வாழ்வை குழந்தைகள் பிற்காலத்தில் வாழ வேண்டும் என்னும் நோக்குடன் ஆசிரியர்கள் கடவுளின் படைப்புப் பணியில் பங்கேற்கிறார்கள். சமூகத்தில் தீமைகள் ஏற்படாமல் தடுக்கும் நோக்குடன் பணி செய்யும் போலிஸ் ஒருவர் கடவுளின் படைப்புப் பணியில் பங்கேற்கிறார். கடவுளை அறிந்து, அவர் திருவுளப் படி மக்கள் வாழ வேண்டும் என்று அறிவுறுத்தி, அவர்களுக்காக பரிகார பலிகளை ஒப்புக் கொடுக்கும் குருவானவர் கடவுளின் படைப்புப் பணியில் பங்கேற்கிறார்.

ஆக வேலை என்பது நாம் விரும்பித் தேர்ந்தெடுத்த ஒன்றாக இருக்க வேண்டும். வேலை செய்யும் போது நாம் சமூகத்திற்கு நலன்மிக்க ஒன்றைச் செய்கிறோம். சமூகத்திற்கு நலன்மிக்க ஒன்றைச் செய்யும் போது, அதற்கான கைம்மாறாக ஊதியம் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தி தனி மனிதர் தன் வாழ்க்கையையும் குடும்பத்தையும் காப்பாற்றுகிறார். இவ்வாறாக அவர் மாண்பு மிக்க வாழ்வை வாழ்கிறார். கடைசியாக, இவ்வாறாக வேலை செய்யும் ஒவ்வொருவரும் கடவுளின் படைப்புப் பணியில் பங்கேற்கின்றனர்..  



Post a Comment

0 Comments