Episode 103, DOCAT 42, குடும்பங்களுக்கு அரசு ஆற்ற வேண்டியப் பணி

இன்றைய தினம் DOCAT நூலின் 130, 131, 132, 133 ஆகிய எண்களில் கூறப்படும் குழந்தைப் பேறு பற்றிய சிந்தனைகளைப் பார்ப்போம்.

சமூகத்தைப் பொறுத்தவரைக்கும் ஆக மொத்தத்தில் முக்கியத்துவம் பெற்றதாக குடும்பம் ஆனது இருக்கிறது என்பதை DOCAT நூலானது வலியுறுத்திக் கூறுகிறது. ஆகையால் நாட்டையும் மாநிலங்களையும் ஆளும் அரசுகள் அனைத்தும், குடும்பங்களை நிலைநிறுத்தவும், அவற்றின் நலனுக்காக இயன்ற அனைத்தையும் செய்தாக வேண்டும்.

அயர்லாந்து நாட்டின் அரசியலமைப்பில் பின்வருமாறுக் கூறப்பட்டிருக்கிறது: “குடும்பமானது அதன் இயல்பிலே சமூகத்தின் முதன்மையானதும் அடிப்படையானதுமான அலகாகவும் திகழ்கிறது. அறம் சார்ந்த நிறுவனமாக இருக்கும் குடும்பத்தின் உரிமைகளை புது சட்டங்களால் நீக்கி விட முடியாது. குடும்பத்தின் உரிமையை அரசின் வேறு எவ்விதச் சட்டத்தாலும் நீக்கி விட முடியாது.” மேல் கூறிய மேற்கோளில் பின்வருவன முக்கியமானவை

-    சமுகத்தின் முதன்மையான மற்றும் அடிப்படையான அலகு குடும்பம்

-    அறம் போதிக்கப்பட்டு, மனிதம் வளர்க்கப்படும் இடம் குடும்பம்

-    குடும்பமானது இயல்பாகவே பெற்றிருக்கும் உரிமைகளை, வேறு எந்தச் சட்டங்களாலும் பறிக்க முடியாது.

இதன் அடிப்படையில் DOCAT நூலின் 130 ஆம் எண்ணானது, தம்பதியரின் உரிமையையும் அரசின் கடமையையும் பற்றிச் சொல்கிறது. எத்தனைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கலாம் என்னும் உரிமையானது முழுக்க முழுக்கப் பெற்றோரின் உரிமையாக பார்க்கப்படுகிறது. ஆனால், அரசானது, மக்கள் தொகையைப் பற்றியும், குழந்தைகளை பெற்றெடுப்பதிலும் வளர்ப்பதிலும் பெற்றோர்கள் எப்படி பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதைப் பற்றி அறிவுறுத்தலாம். அவ்வாறே, குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான நலத்திட்டங்களை அரசு அறிவிக்கலாம். ஆக, குடும்பத்தையும், குழந்தைகளையும் பேணவும் பராமரிக்கவும் அரசுகள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டுமே ஒழிய குடும்பத்தில் கட்டுப்பாடுகளை எவ்விதத்திலும் அரசுகள் ஏற்படுத்தக் கூடாது.

அரசு குடும்பத்திற்கு என்னென்ன செய்ய வேண்டும்?

-  தம்பதியரின் சுதந்திரத்தைக் கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும். அவ்வகையில், குழந்தைகளை வளர்க்கும் பணியை அரசு ஏற்றெடுக்கக் கூடாது. அது பெற்றோரின் கடமையாக இருக்க வேண்டும்.

-    குடும்பங்கள் பொருளாதார நலம் பெறவும், உடல் நலமும் பெற்று வாழவும், முறையான கல்வியைப் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளவும், தம்பதியரும் பிள்ளைகளும் உகந்த வேலையை பெறவும் அரசு அனைத்தையும் செய்தாக வேண்டும்.

-    பெற்றோர் அளிக்க வேண்டிய ஞானத்தையும், ஒழுக்க நெறிகளையும் பெற்றோரே அளித்தார வேண்டும். அப்பணியை வேறு நிறுவனங்கள் சொந்தமாக்கக் கூடாது. நர்சரிகள், ப்ளே ஸ்கூல், டே கெயர் சென்டர் போன்றவை அனைத்தும் பெற்றோர் அளிக்கும் பயிற்சிக்கு துணை நிற்க வேண்டுமே ஒழிய, அவை பெற்றோருக்கு மாற்றாக அமையக் கூடாது.

-    சமூகம் ஆனது பல அதிகாரப் படிநிலைகளைக் கொண்டது. அரசு அதிகாரங்களைக் கொண்டுள்ளது, காவல் துறை, அரச அலுவலர்கள் என ஏராளமான அதிகாரங்களை நாம் காண்கிறோம். அது போலவே குடும்பத்திற்கென்றும் தனி அதிகாரம் உண்டு. அவ்வதிகாரத்தில், அரசோ வேறு எந்த நிறுவனமோ தலையிடக் கூடாது. குடும்ப வன்முறை, குழந்தைகளை வன்முறைக்கு உட்படுத்துதல் போன்றவை வரும் போது மட்டும் அரசு, தனி மனிதரின் உரிமையைக் காக்கும பொருட்டு குடும்ப விஷயங்களில் தலை இடலாம்.

-    அரசும் சமூகமும் தங்களால் இயன்ற அனைத்தையும் குடும்பத்திற்கு செய்ய வேண்டும்.

சமூகத்தின் இயல்பான மற்றும் அடிப்படையான அலகான குடும்பமானது அரசாலும் சமூகத்தாலும் பாதுகாக்கப்பட வேண்டும்என்று உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் கூறுகிறது.




Post a Comment

0 Comments