Episode 102, DOCAT 41, குழந்தைப் பேறு

இன்றைய தினம் DOCAT நூலின் 127, 128, 129 ஆகிய எண்களில் கூறப்படும் குழந்தைப் பேறு பற்றிய சிந்தனைகளைப் பார்ப்போம்.

நான்கு குழந்தைகளை வளர்ப்பதை விட எளிது, உலகை ஆள்தல்என்று வின்சென்ட் சர்ச்சில் அவர்கள் கூறினார்.

குழந்தைகளைப் பெற்றெடுத்தலும், அவர்களை வளர்த்தெடுத்தலும் சவால் மிக்கது மட்டுமல்லாமல் அதற்குள் நிறைய தியாகங்களும் அடங்கி இருக்கின்றன என்பது இங்கே முன்வைக்கப்படும் கருத்து.

திருமண வாழ்விலிருந்து குடும்ப வாழ்வைப் பிரித்துப் பார்க்கும் போக்கானது இன்று முளைவிட ஆரம்பித்திருக்கிறது. அதாவது ஒத்தக் கருத்துடைய இருவர் சேர்ந்து வாழ்கிறார்கள் அதுவே மணவாழ்க்கை என்று கூறுதல் நடக்கிறது. குடும்பம் இல்லாமல் மணவாழ்க்கை இல்லை, அது போல மணவாழ்க்கை இல்லாமல் குடும்பமும் இல்லை. நற்சமூகம் அமைய குடும்பம் அடிப்படையானது என்பதை உளவியலாளர்கள், நரம்பணுவியல் நிபுணர்கள், உளவியல் ஆய்வர்கள், குற்றங்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபடுவோர் முன்வைக்கும் கருத்து என்பதை நாம் மனதில் கொள்வோம். அத்தகையச் சூழலில், குடும்பமின்றி இருவர் சேர்ந்து வாழ்தல் என்து அபத்தமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. ஆக ஆணும் பெண்ணும் இயற்கையின் நியதிப்படி முறைப்படி திருமணம் செய்து கொண்டு குடும்பமாக வாழ வேண்டும் என்பதை திருஅவை வலியுறுத்திறது. இதில் குழந்தைகள் என்பது கடவுள் கொடுக்கும் பெரும் கொடை. கடவுள் கொடுக்கும் குழந்தைகளை நிராகரிக்காமல் திறந்த மனநிலையோடு ஏற்க வேண்டியது திருமணமான தம்பதியரின் கடமை. ஆகையால் திருமண உறவு என்பது வெறுமனே இன்பமாக மட்டும் சுருங்கி விடமால், குழந்தைகளைப் பெற்றெடுத்து உறவை வளர்ப்பதாகவும், அன்பை பரிமாறுவாதாகவும் அமைய வேண்டும். அதுபோல பொறுப்புமிக்க நல்ல தலைமுறையை உருவாக்குவதாகவும் இருக்க வேண்டும். கடவுள் அன்பு கூர்ந்து அளிக்கும் குழந்தைகளை மனமுவந்து நீங்கள் ஏற்றுக் கொண்டு, கிறிஸ்து மற்றும் திருஅவையின் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப வளர்த்து வருவீர்களா?” என்று இலத்தீன் திருமண முறைப்படி திருமணம் நடக்கும் வேளையில், குருவானவர் கேட்பதுண்டு. இதற்கு தம்பதியர் ஆம் என்று பதிலுரைப்பது வழக்கம். சீரோ மலாபர் திருஅவையில் இதேச் சிந்தனை செபங்களின் போது, குறிப்பாக இறுதி ஆசியின் வேளையில் வெளிப்படுகிறது.

குழந்தை பாக்கியத்துக்காக ஏங்கி நிற்கும் தம்பதியரை நாம் பார்த்திருக்கிறோம். அதனால் மன உளைச்சலுக்கு உட்படுவோரும் உள்ளனர். நம்முடைய நம்பிக்கையின் படி, குழந்தைப் பேறு என்பது கடவுள் அளிக்கும் கொடை. அதைப் பெறுவதற்காக அவர்கள் ஆசைப்பட வேண்டும், அதற்கான மருத்துவ உதவிகளையும் நாட வேண்டும். அப்படியிருந்தும் கிடைக்கவில்லை என்றால், அது பயனற்ற வாழ்வாக பார்க்கப்படக் கூடாது. அவர்கள் தாயாகவும் தந்தையாகவும் மாறலாம். குழந்தைகளை தத்தெடுக்கலாம், இல்லையென்றால் பிற குழந்தைகளின் வளர்ச்சிக்காக தங்களையே அர்ப்பணித்துக் கொள்ளலாம். இவைகள் எல்லாம் தாய்மையின் இயல்பாகவும் தந்கைக்குரிய இயல்பாகவும் பார்க்கப்பட வேண்டும்.

எத்தனைக் குழந்தைகளை ஒருவர் பெறலாம்? என்னும் கேள்வி உண்டு. கடவுள் கொடுக்கும் குழந்தைகளை முழு மனதுடன் ஏற்க வேண்டு என்பதை திருஅவை அறிவுறுத்துகிறது. ஆனால் பொறுப்புமிக்க பெற்றோர்களாக நடந்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அறிவுறுத்துகிறது. நிறைய குழந்தைகளைப் பெற்றெடுத்து அவர்களை முறையாக வளர்க்கவில்லை என்றால் அது பெரும் ஆபத்தில் போய் முடியும். சமூகத்தில் கிரிமினல்களை உருவாக்கும் நிலையும் ஏற்படும். ஆகையால் குழந்தையைப் பெற்றெடுதால், அதற்கு போதுமான நம்பிக்கை, கல்வி ஆகியவற்றை பொறுப்பான முறையில் கொடுத்து வளர்த்து வர வேண்டியது பெற்றோரின் கடமை. ஆகையால் பொறுப்புமிக்கவர்களாக செயல்பட்டு, தேவைக்கு ஏற்ப குழந்தைகளை பெற்றெடுத்தல் நல்லது என்பதை திருஅவை முன்வைக்கிறது. அதே வேளையில் போதிய வசதிகள் இருந்தும், நம்பிக்கை இருந்தும் குழந்தைகளின் எண்ணிக்கையைச் சுருக்கிக் கொள்ளுதல் அல்லது வேண்டாம் என்று வைத்தல் ஆகியவை சுயநலம் அல்லாம் வேறல்ல.

பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம்; மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில்” (திபா 127:3).    





Post a Comment

0 Comments