Episode 101, DOCAT 40, திருமணம் -2

கடந்த அத்தியாயத்தல் திருமணத்தின் நோக்கத்தைப் பற்றிப் பார்த்தோம். இன்றைய தினம் DOCAT நூலின் 124, 125, 126 ஆகிய எண்களில் கூறப்படும் திருமணம் பற்றிய மேலும் சிலக் கருத்துக்களை காண இருக்கிறோம்.

குடும்பங்களுக்கு அடிப்படையாக திருமணமானது இருக்கிறது. கணவனும் மனைவியுமாக அன்புடன் வாழ்தல், ஒருவர் மற்றவருக்கு உண்மையான, முழுமையான அன்பைக் கொடுத்தல் போன்றவை திருமணத்தில் நடக்கிறது. மேலும். அவர்கள் ஒருவரை ஒருவர் முழுமையாக அன்பு செய்வதன் அடையாளமாக உடலையும் பரிமாறிக் கொள்கின்றனர். பாலியல் உறவு என்று அழைக்கப்படும் இதன் வழியாக குழந்தைகள் பிறக்கிறார்கள். இதன் வழியாக கணவன் மனைவி ஆகியோர் தாய் தந்தை என்னும் நிலைகளை அடைவதோடு, அவர்களின் வாழ்வானது கூடுதல் உறுப்பினர்களுடன் விரிவடைகிறது. “குழந்தைகள் வேண்டாம் எனும் தீர்மானம் தன்னலத்தின் வெளிப்பாடு. உயிர்கள் பலுகும் போது, வாழ்வு இளமையாகிறது, ஆற்றல் அடைகிறது. வாழ்வு செழிப்பாகுமே ஒழிய இழப்புகள் ஏதும் நேர்வதில்லை” எனத் திருத்தந்தை திருமணமாகிவிட்டு குழந்தைகள் வேண்டாம் என இருப்பவர்களுக்கு அறிவுரை கொடுக்கிறார். குழந்தைகளைப் பெற்றுக் கொண்டால் தங்களுடைய சுதந்திரத்தை இழக்க நேரிடும் என்று கூறுபவர்களுக்குப் பதிலாகத் திருதந்தை இதைக் கூறுகிறார். ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக வாழும் போது அதில் குழந்தைகள் இணைய வேண்டும் அதன் வழியாக குடும்பமானது விரிவடைய வேண்டும், அப்போது அங்கே மகிழ்ச்சிப் பெருகும். குடும்பம் செழிப்பு மிக்கதாக மாறும்.

திருமணம் வழியாக ஒன்றிணையும் கணவனும் மனைவியும் மாண்பில் சமமாக இருக்கிறார்கள். அவர்களுக்குள் மாண்பின் அடிப்படையில் எவ்வித வேறுபாடுகளும் இல்லை என்பதை திருஅவை அழுத்தமாக முன்வைக்கிறது. ஆனால், இருவரும், இயற்கையின் நியதியால் கடவுள் அளித்திருக்கும் தனித்தனி கடமைகளால் வேறுபடுகிறார்கள் என்பதையும் திருஅவை முன்வைக்கிறது. குழந்தையை கருவுற்றுப் பெற்றெடுப்பதால் பெண்கள் பலவீனமானவர்கள் என்றோ, குழந்தையை வளர்த்தெடுப்பதில் கூடுதல் கடமை உடையவர்கள் என்றோ வேறுபாடுகளை திருஅவை முன்வைக்கவில்லை. ஆனால், இருவரும் அன்பை வெளிப்படுத்துவதிலும், குழந்தைகளையும் குடும்பத்தையும் பேணுவதிலும் வேறுபடுகிறார்கள் என்பதைக் கூறுகிறது. இருவரும் ஒருவர் மற்றவரின் பலவீனங்களை போக்குவதிலும், ஒருவர் மற்றவரை ஆற்றல்படுத்துவதிலும் தோளோடு தோள் நின்று முயற்சிக்க வேண்டும். 

இன்றைய உலகில், கணவனும் மனைவியும் பல்வேறு காரணங்களால் பிரியும் சூழலானது உருவாகி இருக்கிறது. இது அதிகரித்தும் வருகிறது என்பது வேதனைக்குரியதாக இருக்கிறது. தம்பதியரின் ஒற்றுமை, அவர்கள் சேர்ந்து வாழ்வதன் அவசியம் போன்றவற்றை திருஅவை உயர்வாக மதிக்கிறது. ஆணும் பெண்ணும் சேர்ந்து குடும்பமாக வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கம் ஆழமான ஆசையாக இருக்கிறது. விவாகரத்துச் செய்து கொள்வதை திருஅவை ஒருபோதும் ஆமோதிப்பதில்லை. காரணம் அது, ஆணுக்குள்ளும் பெண்ணுக்குள்ளும் ஏராளமான சிக்கல்களை உருவாக்கும். அதுமட்டுமல்லாமல் குழந்தைகளின் வாழ்வையும் அது பாதிக்கும். அதே வேளையில் பிரிந்து வாழும் தம்பதியரை திருஅவை பரிவுடன் கண்ணோக்குகிறது. அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதில் அதீத அக்கறையை திருஅவைக் கொண்டிருக்கிறது.

அன்னைத் தெரசா பின்வருமாறு கூறுகிறார்:

திருமண உறவை கட்டிக் காப்பதில் அவதியுறும் தம்பதியர் அறிவுரைக்காக என்னிடம் வருவதுண்டு. நான் அவர்களிடம் சொல்வதெல்லாம், இறைவனிடம் வேண்டுங்கள், ஒருவரை ஒருவர் மன்னியுங்கள். மேலும், வன்முறை நிறைந்த குடும்பங்களிலிருந்து வரும் இளம் பிள்ளைகளும் என்னிடம் அறிவுரை கேட்பர். அவர்களிடமும் நான் சொல்வேன், இறைவனிடம் வேண்டுங்கள், மன்னியுங்கள். குடும்பத்தின் எவ்வித ஆதரவும் இன்றி, தனித்து விடப்பட்ட தாய்மார்கள் அறிவுரைக்காகக் வருவர், நான் அவர்களிடமும் சொல்வேன், இறைவனிடம் வேண்டுங்கள், மன்னியுங்கள்.கடவுளிடம் இடைவிடாமல் வேண்டுதல் புரிதலும், மன்னித்தலும் அவசியம் என்பதை அன்னைத் தெரசா திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்.

திருத்தந்தை பிரான்சிஸ் கூறுகிறார்: “திருமணம் என்பது அன்றாடக் கடமை. இது கைதேர்ந்த கைவினைஞரின் பணிக்கு ஒப்பானது, பொன் வேலை செய்பவரின் பணிக்கு நிகரானது. கணவன் தன்னுடைய மனைவியை தனது உடனிருப்பாலும் உதவியாலும், உயர்ந்த பெண்மணியாக உயர்த்துகிறார். மனைவியானவர், தனது கணவரை உயர்ந்த மனிதராக உயர்த்துகிறார். இது அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும கடமை. இப்படிப் பட்ட தம்பதியர் வீதியில் நடந்துத் செல்லும் போது, மக்கள் கூறுவார்கள். பாருங்கள் அழகான அப்பெண்மணி எவ்வளவு துணிவு மிக்கவள். இதில் அதிசயம் ஏதுமில்லை, காரணம் அவருடையக் கணவர் அவளுக்கு உயிராகவும் உடலாகவும் துணை நிற்கிறார். கணவனைப் பார்த்து, பாருங்கள் எவ்வளவு துணிவு மிக்க திடகாத்திரமான ஆண்மகன். இதிலும் அதிசயம் ஒன்றுமில்லை, காரணம் அவருடைன் உடன் வாழும் மனைவியால் அவருக்கு இது சாத்தியமாகிறது.குழந்தைகளும் பெரும் பாக்கியம் செய்தவர்களாக மாறுவார்கள். ஆனந்தமுடன் இணைந்து வாழ்ந்த பெற்றோரின் நற்குணங்களை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்வார்கள். திருமணத்தில், மனைவியின் துணையால், ஆண்மகன் ஆணுக்குரிய இயல்புகளை கூடுதலாகப் பெறுகிறார், கணவரின் துணையால், மனைவி பெண்மையின் இயல்புகளை அதிகமாகப் பெறுகிறார்.




Post a Comment

0 Comments