Episode 99, DOCAT 38, குடும்பம் 5

இன்றைய தினம் DOCAT நூலின் 120 மற்றும் 121 ஆவது எண்களில் கூறப்படும் குடும்பம் பற்றிய கருத்துக்களை காண இருக்கிறோம்.

கடந்த நான்கு அத்தியாயங்களிலாக குடும்பத்தைப் பற்றியச் சிந்தனைகனை நாம் பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம், குடும்பம் எப்படி சமூகத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது என்பது பற்றியும், முதிர்ந்த வயதினரை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதைப் பற்றியும் பார்க்க இருக்கிறோம்.

1.   முதலாவதாக குடும்பம் என்பது, சமூகத்தோடு எவ்விதத் தொடர்பு இல்லாத தனித்தீவல்ல.

2.   குழந்தையைப் பேணுவதிலும், குழந்தையை வளர்ப்பதிலும் பெற்றோருக்கு முக்கியமானப் பொறுப்பு உண்டு என்பது மறுப்பதற்கில்லை. அதைப் பெற்றோர் மிகுந்த கடமை உணர்வுடன் செய்தாக வேண்டும்.

3.   ஒரு குழந்தையை வளர்த்தெடுப்பதில் தந்தைக்கும் தாய்க்கும் சமமான பங்கு உண்டு என்பது உண்மை. தந்தை மற்றும் தாயால் வளர்க்கப்படும் பிள்ளைகள் ஆரோக்கியமானதாக இருக்கும்.

4.   மேலும் குழந்தைகள், தங்களுடைய குடும்பங்களுக்குள் மட்டும் முடக்கப்படக் கூடாது. குடும்பத்தைத் தாண்டி சமூக உறவானது குழந்தைகளின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது.

5.   ஒரு குழந்தையின் கல்வி என்பது வெறுமனே குடும்பத்தைச் சார்ந்ததாக மட்டும் இல்லை. அது, பள்ளிக்கூடம் மற்றும் சமூகத்தில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்ததாக இருக்கிறது. குழந்தையின் ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்கு அனைத்து நிறுவனங்களும் தங்கள் பங்களிப்பைத் தர வேண்டும்.

6.   சட்டங்களைப் பின்பற்றும், அமைதியான, பிள்ளைகள் சமூகத்தோடு நல்லுறவில் வாழும்.

குழந்தைகளைப் பொறுத்தவரைக்கும் மிகவும் முக்கியமான விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. குழந்தைகளுக்கு எத்தகைய சிறந்தப் பயிற்சிகளை நாம் கொடுத்தாலும், அவைப் பயன் தராது. அவர்கள், நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அவற்றைப் பின்பற்றுவார்கள்என்னும் கூற்று உள்ளது. இதை மனதில் கொள்வோம்.

குழந்தைகளைப் பற்றி புனித மதர் தெரசா இவ்வாறு கூறுகிறார்: “குடும்பத்திற்கும், நாட்டிற்கும், உலகிற்குமாக கடவுள் கொடுக்கின்ற மிகப்பெரிய கொடையாக குழந்தை இருக்கிறது.”

கடவுள் மனிதர்களைப் புறந்தள்ளவில்லை என்னும் செய்தியைச் சுமந்தவாறு குழந்தைகள் உலகில் பிறக்கின்றனஎன ரபீந்திரநாத் தாகூர் கூறுகிறார்.

குழந்தைகள் இன்று பலவிதத் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுகின்றன. குழந்தைகளைக் கடத்துதல், அவர்களை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்துதல் போன்றத் தீமைகள் இன்று சமூகத்தில் நிலவுகின்றன. குழந்தைகளைப் பேண வேண்டியது சமூகத்தின் பொறுப்பு.

குடும்பங்களில் முதியவர்களைப் பேண வேண்டியதும் அவர்களுக்கு தேவையான பராமரிப்பைக் கொடுக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது.

1.   குடும்பங்களில் முதியவர்களின் உடனிருப்பானது மதிப்புக்குரியது.

2.   அவர்கள் தங்கள் அனுபவத்தால் இளந்தலைமுறையினரின் வாழ்வில் முக்கியமானப் பங்கை வகிக்க முடியும்.

3.   அவர்கள் நற்குணங்களை இளைய தலைமுறையினரிடையே கடத்தி விடுவதற்கு ஏற்றவர்களாக இருப்பார்கள்.

முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும்; என் ஆற்றல் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும்” (திபா 71:9) என்று  திருவிவிலியம் கூறுகிறது. நம்மை சார்ந்திருக்கும் குழந்தைகளையும் முதியவர்களையும் பேணுவோம்.



Post a Comment

0 Comments