இன்றைய தினம் DOCAT நூலின் 118 மற்றும் 119 ஆவது எண்களில் கூறப்படும் குடும்பம் பற்றிய விவிலியக் கருத்துக்களை காண இருக்கிறோம்.
“இரண்டு காரியங்களை குழந்தைகள் குடும்பத்திலிருந்து பெற்றாக வேண்டும்:
வேர்கள், சிறகுகள்” என்று யோகான் வூல்ஃகாங்
என்பவர் கூறுகிறார்.
இவை இரண்டையும்
பெற்றுக் கொள்ளும் குழந்தைகள் வாழ்வில் உறுதியாய் நிற்கும். வாழ்வில் எதையும்
செய்யாத முடியாத நிலை, உணர்வுகளை வெளிப்படுத்துவதில் முதிர்ச்சி அற்ற நிலை,
தீர்மானங்களை எடுக்க முடியாத நிலை, எடுத்தத் தீர்மானங்களில் நிலைத்து நிற்க
முடியாத நிலை, தோல்விகள் ஏற்படும் போது அதை எதிர்கொள்ள முடியாத திணறல் போன்றவை
இன்று இளைஞர்கள் சந்திக்கும் சிக்கல்களாக உள்ளன. இவற்றிற்கெல்லாம், குழந்தைப்
பருவத்தில் ஏற்பட்டச் சிக்கல்கள் காரணமாக அமையலாம். குடிகார அப்பாக்கள், குடும்பங்களில்
வன்முறை, பெற்றோரின் ஒழுக்கமற்றப் போக்குகள், பிரிந்து வாழும் பெற்றோர் என ஏராளமான
காரியங்களால் சிதைக்கப்பட்ட குழந்தைப்பருவத்தை இளைஞர் ஒருவர் சந்தித்திருந்தால் அதன்
பாதிப்புகள் தற்போது இருக்கும். இத்தகைய பிள்ளைகளால் சமூகமும் பாதிக்கப்படுகிறது.
நல்ல குடும்பமும் குடும்ப உறவும் அமையவில்லை என்றால், முறையற்ற சமுதாயம்
உருவாகிடும். ஆக, நற்சமூகம் உருவாக நல்ல குடும்பங்கள் அவசியம்.
பயன்பாட்டின்
அடிப்படையில் மனிதரைப் பார்க்கும் போக்கு இன்று அதிகரித்திருக்கிறது. இது
உறவுகளிலும் ஏற்பட்டிருக்கிறது. காதல் வயப்படுவோர், பிறரின் நலனை சிறிதும்
கருத்தில் கொள்ளாமல் அவர்களை நசுக்கும் போக்கானது இன்றுக் காணப்படுகிறது.
இத்தகையப் போக்குகளுக்கு, பாதிக்கப்பட்ட குழந்தைப் பருவம் காரணமாக அமைகிறது. “உங்களைப் பற்றிய எவ்வித அறிவும் இல்லாமல் உங்களை அன்பு
செய்பவர் ஒருவர் மட்டுமே உலகில் உண்டு. அது அம்மா” என்று யோகான்
ஹைன்ரிக் என்பவர் கூறுகிறார். நம்மைப் பற்றி எதுவும் அறிந்துக் கொள்ளும் முன்னரே
நம்மை அன்பு செய்பவர் அம்மா. குடும்பங்களில் குழந்தைகள் அன்பின் அடிப்படைகளைக்
கற்றுக் கொள்கிறது. பயன்பாட்டிற்காக பிறரை அன்புச் செய்யக் கூடாது என்னும் மனித
மாண்பு மிக்க நெறியைக் தனி மனிதர் தன் குழந்தைப் பருவத்திலிருந்துப் பெறுகிறார்.
தாய் அன்பும் அதற்கு நிகரான பிற அன்பும் குடும்பங்களில் கிடைக்கப் பெறாத ஒரு
மனிதர் பிற்காலத்தில் கடினமான மனம் உடையவராகவும், பிறரை பயன்படுத்திவிட்டுத்
தூக்கி எறிபவராகவும் மாறலாம்.
“உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள்
நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட”
(விப 10:12) என்று கடவுள் கட்டளைத்
தந்திருக்கிறார். இது நான்காவது கட்டளை. பிள்ளைகள் பெற்றோருக்கு மதிப்புக் கொடுக்க
வேண்டியது எவ்வளவு அவசியமாக இருக்கிறதோ, அவ்வாறே பெற்றோரும் குழந்தைகளுக்கு
மதிப்பளிக்க வேண்டும். “பெற்றோர்களே, உங்கள்
பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்கள் மனந்தளர்ந்து
போவார்கள்” (கொலோ 3:21) என்று
இறைவார்த்தைக் கூறுகிறது. நாம் சமத்துவம் என்பதைப் பற்றிக் கேட்டிருப்போம். ஏற்றத்
தாழ்வுகள் இல்லாத சமூகம் அமைய வேண்டும். அடிமை ஆண்டான் முறைமைக் கூடாது
என்றெல்லாம் இளைஞர்களாகிய நாம் கூறுவதுண்டு. அது போல, சிலரை நிறம், மொழி,
வகிக்கும் பதவி போன்றவற்றின் அடிப்படையில் உயர்ந்தவர்களாகவும் மற்றவர்களைத்
தாழ்ந்தவர்களாகவும் கருதவும் கூடாது என்பதையும் நாம் கூறுவதுண்டு. அப்படி நாம்
யாராவது நடத்தினால் நமக்கு எரிச்சல் ஏற்படும். இத்தகைய ஏற்றத்தாழ்வற்ற நிலை
குடும்பத்திலும் இருக்க வேண்டும்.
“பெற்றோர்கள் மீது குழந்தைகளுக்கு மரியாதை இருக்க வேண்டும். இதில் எவ்வித
சந்தேகமும் இல்லை. அதுப்போலவே, பெற்றோரும் குழந்தைகளையும் மரியாதையுடன் நடத்த
வேண்டும். பெற்றோர் என்பதால் குழந்தைகளைவிட இயற்கையாகவே அவர்கள் தங்களை
உயர்ந்தவர்களாக பாவிக்கும் நிலை ஏற்படுவதுண்டு. ஆனால், அதை அவர்கள் தவறாகப்
பயன்படுத்தி பிள்ளைகள் மீது வன்முறை காட்டக் கூடாது” என்று
ஆஸ்ட்ரிட் லிங்ரன் என்பவர் கூறுகிறார்.
0 Comments