Episode 97, DOCAT 36, குடும்பம் 3

இன்றைய தினம் DOCAT நூலின் 116 மற்றும் 117 ஆவது எண்களில் கூறப்படும் குடும்பம் பற்றிய விவிலியக் கருத்துக்களை காண இருக்கிறோம்.

மனிதர் நலமுடன் வாழ வேண்டுமென்றால், நலமான குழந்தைப் பருவம் அமைய வேண்டும் என ஆஸ்டிரிட் லின்டகிரென் கூறுகிறார். குழந்தைப் பருவம் என்பது தனிமனிதரைப் பொறுத்தவரைக்கும் மிகவும் முக்கியமான காலகட்டம். நலமான குடும்பச் சூழலில் வாழும் குழந்தைகள் நலமுடன் வாழும் என்பதே உண்மை. ஒவ்வொரு காலத்திலும் குடும்பத்தின் அமைப்பானது மாறி வந்திருக்கிறது. நவீன உலகில் இம்மாற்றமானது பெருமளவு நடந்திருக்கிறது. கிராமமாக சேர்ந்து வாழ்தல், உறவினர்கள் சுற்றி வாழ அவர்களோடு கூடி வாழ்தல், கூட்டுக் குடும்பமாக வாழ்தல், பாட்டித் தாத்தாவுடன் சேர்ந்து வாழ்தல் போன்ற அமைப்புகள் இன்று மாற்றம் கண்டிருக்கிறது. பெரும்பாலும் பெண்கள் மட்டுமே குழந்தைகளை பராமரிக்க வேண்டும் என்னும் சூழலும் மாறி இருவரும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் போக்கும் அதிகரித்திருக்கிறது. இவைகள் எல்லாம் நடப்பதால், குடும்பத்தின் முக்கியத்துவம் குறைந்து விட்டது எனக் கூற முடியாது. நகரமயமாக்கல், நகரங்களில் அடுக்குமாடிகளில் வாழ்தல் போன்றவை இன்று அதிகரித்திருக்கிறது. கல்வி அறிவு பெருகி இருக்கிறது. இவ்வாறாக மாற்றங்கள் நடந்திருக்கும் சூழலில், பிள்ளைகளை வளர்த்தெடுப்பதில் பெற்றோர் காட்டும் அக்கறையும் பெருகி இருக்கிறது. குழந்தை நலம், அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய நலமான உளவியல் சூழல், தரமான கல்வி போன்றவற்றைப் பற்றிய உணர்வு இன்று வளர்ந்திருக்கிறது என்று கூறலாம். மாறி வரும் உலகத்திற்கு ஏற்ப குடும்பங்கள் தங்களை தகவமைத்துக் கொண்டாலும், குடும்பங்கள் இன்றி சமூகம் என்பது இல்லாமல் போகும். நலமான சமூகம் உருவாக வேண்டுமென்றால் நலமான குடும்பங்கள் இங்கே இருக்க வேண்டும். சமூகத்தின் பொருளாதார, அரசியல் பண்பாட்டு வளர்ச்சிகளும் குடும்பம் இன்றி அமையாது.

தனி மனித கனவுகள், தனிமனித சுதந்திரம், தனிமனித உரிமைகள் போன்றவை இன்று ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன எனலாம். அதனால் குடும்பம் அமைத்தால், சொந்த கனவுகளை அடைய முடியாது, சுதந்திரம் பறிபோய் விடும், தனி மனித உரிமைகள் பறிபோய் விடும் போன்ற தடம் மாறிய கருத்துக்கள் இன்று சமூகத்தில் ஒலிக்கின்றன. திருத்தந்தை இரண்டாம் ஜாண் பால், இத்தகைய சிந்தனைகள் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி எச்சரித்திருக்கிறார். அவர் கூறுகிறார், குடும்பத்திற்கு கொடுக்க வேண்டிய முதன்மையான இடத்தை கொடுக்காமல், தனி மனித சுதந்திரங்களையும், உரிமைகளையும் முதன்மையாக்கி சமூகத்தைக் கட்டமைக்கலாம் என்றால் அது ஆபத்தில் போய் முடியும். இத்தகைய போக்கானது சமூத்தை சீரற்ற நிலைக்குத் தள்ளி விடும் என்று திருத்தந்தை எச்சரிக்கிறார்.

தனிமனித வாழ்க்கையில் குடும்பம் ஏற்படுத்தும் மாற்றங்களை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்

-    கூடி வாழ்தலின் இன்பத்தை முதன்முறையாக, தனிமனிதர் குடும்பத்திலிருந்துக் கற்றுக் கொள்கிறார்.

-    தனிமனிதர் குடும்பத்தில் வைத்துத்தான் முதலில் அன்புச் செய்யப்படுகிறார், மதிக்கப்படுகிறார், கவனிக்கப்படுகிறார்.

-    குடும்பத்தில் தான் தனிமனிதர் தனது உள்ளார்ந்த திறமைகளை வளர்த்தெடுக்க ஆரம்பிக்கிறார்.

-    வாழ்க்கையில் பொறுப்புணர்வுடன் செயல்படுதவற்கான பயிற்சியை தனிமனிதர் குடும்பத்தில் கற்றுத் தெரிந்துக் கொள்கிறார்.

-    குழந்தைகள் பெற்றோருக்கும் பாட்டிக்கும் தாத்தாவுக்கும் அளிக்க வேண்டிய மதிப்பையும், அன்பையும் குடும்பத்தில் வைத்துத்தான் அறிய வருகிறார்.

-    நற்சமூகம் நற்குடும்பங்கள் இருந்தால் அமையும்.

அன்புச் செய்யப்படாத குழந்தைகள், அன்பு செய்ய முடியாத மனிதர்களாக உருமாறுகிறார்கள்என்று பேர்ள் பக் என்பவர் கூறுகிறார். 



Post a Comment

0 Comments