Episode 94, Docat 33 – நற்சமூகத்திற்கான அடிப்படை மதிப்பீடுகள் – உண்மை, சுதந்திரம், நீதி - 5

இன்றைய அத்தியாயத்தில் நாம் DOCAT நூலிலிருந்து 110 மற்றும் 111 ஆம் எண்களில் காணப்படும்  நீதிக்கும் அன்பிற்கும் இடையேயான தொடர்பைப் பற்றிப் பார்ப்போம்.

ஓரிடத்தின் ஒரு மனிதன் நேர்மையானவராக இருந்து நேரியவற்றைச் செய்து விட்டு இன்னொரு இடத்தில் நேர்மையற்றவராக செயல்பட்டு தவறானவற்றைச் செய்ய முடியாது. காரணம் தனிமனித வாழ்வென்பது பிளக்க முடியாத முழுமைஎன்று மகாத்மா காந்தி அவர்கள் கூறினார்.

ஆள் பார்த்து இடம் பார்த்து நல்லவர்களாகவும் நன்மை செய்பவர்களாகவும் இருந்து விட்டு தங்களது பிடிக்காத நபர்களிடமும், மறைவான இடங்களிலும் தவறு செய்பவர்களை இன்று சமூகத்தில் பார்க்க முடியும். இத்தைகைய நிலை மாற வேண்டுமென்றால், தனிமனித நேர்மையென்பது அவசியமாக இருக்கிறது. நான் எனக்கு நேர்மையுடையவளாக இருப்பேன், என்னையே நான் ஏமாற்றிக் கொள்ள மாட்டேன் என்னும் நிலை ஏற்பட வேண்டும். இதற்காக நாம் கடவுளிடம் திரும்பியாக வேண்டும்.

சுதந்திரம், உண்மை, நீதி போன்ற அனைத்து மதிப்பீடுகளும் கடவுளிடமிருந்தேத் தொடங்குகிறது. கடவுள் அன்பாய் இருக்கிறார்” (1யோவா 4:8) என்று திருவிவிலியத்தில் நாம் வாசிக்கிறோம். அன்பு என்பது கடவுள் கொண்டிருக்கும் குணம் அல்ல, மாறாக அவர் அன்பாகவே இருக்கிறார். அது அவருடைய இயல்பு. கடவுள் அன்பாக இருக்கிறார் என்றால் அன்பு தான் சமூக வாழ்வுக்கான அச்சாணியாக இருக்க வேண்டும். அன்பு இருக்குமிடத்தில், சுதந்திரம் இருக்கும். நாம் உளப்பூர்வமாக ஒருவரை அன்பு செய்கிறோம் என்றால் அவருடைய சுதந்திரத்தை நாம் மதிப்போம். பேசுவதற்கான சுதந்திரம், சொந்தமாக உழைப்பதற்கான சுதந்திரம், தனிச் சொத்துடன் நல் வாழ்க்கை அமைத்துக் கொள்வதற்கான சுதந்திரம் அனைத்தையும் அனுமதிக்க முடியும். அவ்வாறே நான் உண்மையாக செயல்படுவேன். பொய்கள் பேசி பிறரை ஏமாற்றும் நிலைக்குச் செல்ல மாட்டேன். மேலும் நேர்மையுடன் செயல்படுவேன்.

புனித தோமஸ் அக்யுனாஸ் இவ்வாறு கூறுகிறார்: “நல்லனவற்றில் மகிழ்ச்சிக் காண்பதே அன்பு. நல்லனவற்றைச் செய்தலே அன்பு நோக்கமாகவும் கொண்டுள்ளது. மற்றொரு நபருக்கு நல்லது நடக்க வேண்டும் என்று விருப்பம் கொள்வதே அன்பு.”

நீதியானது அன்போடு இரண்டறக் கலந்தது என்பதை திருஅவை வலியுறுத்துகிறது. “சுதந்திரமின்றி அமைதி ஏற்படாது, நீதியில்லையேல் சுதந்திரம் வாய்க்காது, அன்பு இல்லையேல் அங்கு நீதியும் இருக்காதுஎன டான் அசான் என்னும் மனித உரிமையாளர் கூறுகிறார். ஆக அன்பே அனைத்தின் அடிப்படையாக இருக்கிறது. நாம் நீதியுடன் செயல்பட வேண்டும் என்றால் அங்கே அன்பு இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, நிறுவனம் ஒன்றில் உழைக்கும் ஒருவருக்கு நியாயமான கூலி வழங்குவதை நீதி என்று சொல்லலாம். இது அவசியம் செய்தாக வேண்டும். ஆனால் அதே வேளை, அவருடைய குழந்தை நோய் பாதித்து மருத்துவமனையில் இருக்கையில், பணம் தேவைப்படுகிறது என்றால், கூலிக்கும் அதிகமாக அவருக்கு உதவி செய்ய வேண்டும். இதை அன்பு என்று சொல்ல வேண்டும். ஆக, நீதியைத் தாண்டிச் செயல்படுவதாக அன்பு இருக்க வேண்டும். ஆனால், தனக்கு விருப்பமானவர்களுக்கும், உறவினர்களுக்கும் அன்பு என்னும் பெயரில் நியாயமற்றுச் செயல்படுகிறோம் என்றால் அது அன்பு அல்ல. அது அநீதி. ஆகையால்தான் நீதியில் கனிந்த அன்பு என்று சொல்கிறார்கள்.

மானிடரை கடவுள் தன்னுடைய உருவில் படைத்தார் என்பதை விவிலியம் கூறுகிறது. அப்படி கடவுளின் உருவில் படைக்கப்பட்ட மானிடர் யாவரும் மாண்பு மிக்கவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் கடவுளின் அன்புக்குரியவர்கள், அவர்கள் மீற முடியாத மாண்பைப் பெற்றவர்கள். அப்படிப்பட்ட மானிடருக்கு இழைக்கப்படும் அனைத்து அநீதிகளும் கடவுளுக்கு இழைக்கப்படும் அநீதிகளான இருக்கின்றன.

நீதியானது அன்பைக் கொண்டதாக இருக்க வேண்டும். இரக்கம் மிக்கதாக, கனிவு மிக்கதாக, பொறுமையுடையதாக இருக்க வேண்டும். சமூக நீதி என்பது இத்தகைய அன்பால் வழிநடத்தப்படும் ஒன்றாக இருக்க வேண்டும். நாட்டில் நிலவும் சட்டங்கள் எல்லாம், தண்டனைக் கொடுப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருந்தால், அது மனிதனைப் பேணும் நோக்கத்திலிருந்து விலகி விடும்.

அன்பைப் பற்றி புனித பவுல் இவ்வாறு கூறுகிறார் என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை” (1கொரி 13:3).

அன்புடன் செயல்படுவோம். அன்பு இருந்தால் சுதந்திரம் இருக்கும், உண்மை இருக்கும், நீதி இருக்கும்.



Post a Comment

0 Comments