Episode 93, Docat 32 – நற்சமூகத்திற்கான அடிப்படை மதிப்பீடுகள் – உண்மை, சுதந்திரம், நீதி - 4

இன்றைய அத்தியாயத்தில் நாம் DOCAT நூலிலிருந்து 108 மற்றும் 109 ஆம் எண்களில் காணப்படும்  நீதீயைப் பற்றியச் சிந்தனைகளைப் பார்க்க இருக்கிறோம்.

ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியுடனும் நேர்மையுடனும் நடந்துகொள்ளுங்கள்; பறிகொடுத்தோரை கொடியோரிடமிருந்து விடுவியுங்கள்; அன்னியரையும் அனாதைகளையும் கைம்பெண்களையும் ஒடுக்காதீர்கள்; அவர்களுக்குக் கொடுமை இழைக்காதீர்கள்; மாசற்றோரின் இரத்தத்தை இவ்விடத்தில் சிந்தாதீர்கள்என்று எரேமியா இறைவாக்கு நூல் 22 ஆம் அதிகாரம் மூன்றாம் இறைவார்த்தையில் வாசிக்கிறோம். நீதிக்காகத் தாகம் கொள்ளும் கடவுளை திருவிவலியமானது முன்வைக்கிறது. குறிப்பாக, உரிமைகள் இழந்துத் தவிப்போருக்கு உரிமை கொடுப்பவராகக் கடவுள் இருக்கிறார்.

நீதி என்றால் என்ன? “கடவுளுக்குரியதை கடவுளுக்கும் அயலாருக்குரியதை அயலாருக்கும் கொடுப்பதற்கான நிரந்தரமான தீர்மானமும் விருப்பமுமே நீதிஎன திருஅவை கற்பிக்கிறது. ஆக இதில் இரு காரியங்கள் இருக்கின்றன. முதலாவதாக கடவுளுக்குக் கொடுக்க வேண்டியதை கடவுளுக்குக் கொடுக்க வேண்டும். அது பணம் அல்ல நேரிய வாழ்வு. மனசாட்சிக்கு ஏற்ற வாழ்வு. கடவுளை அன்பு செய்து அவரது சொற்களைக் கேட்கின்ற மனநிலை.

படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்கவேண்டும்என எபிரேயர் 4: 13 இல் வாசிக்கிறோம். ஆகையால் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் கடவுளுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா என்பதை பரிசோதிப்புப் பார்க்க வேண்டும். மேலும் வாசிக்கிறோம், சகோதர சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்; கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு” (உரோ 12:1) எனப் பவுலடியார் கூறுகிறார். நம்முடைய அன்றாட வாழ்வு கடவுளுக்கு உகந்ததாக இருக்கிறதா என உள்ளத்தை ஆய்வு செய்து வாழ்வோம். என் கடவுளாகிய ஆண்டவரே, உமது நீதிக்கேற்ப என் நேர்மையை நிலைநாட்டும்!எனத் திருப்பாடல் 35:24 கூறுகிறது. கடவுளின் தரும் நீதியைப் பெற நாம் நேர்மையுடன் செயல்படுவோம்.

இரண்டாவதாக நாம் அயலாரை அன்பு செய்ய வேண்டும். சமூக நீதி எனப் பல வேளைகளில் நாம் கேட்டிருப்போம். இதுத் திருச்சபையின் படிப்பினையும் கூட. இதில் மூன்று உள்ளீடுகள் உள்ளன. அவையாவன, பகிர்வு நீதி – Distributive Justice, சட்ட நீதி – Legal Justice, பரிமாற்ற நீதி – Commutative Justice. இவை மூன்றையும் உள்ளடக்கியதாக சமூக நீதியானது இருக்கிறது.

பகிர்வு நீதியானது சமூகத்தில் வாழும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் பகிர்தலை அடிப்படையாகக் கொண்டது. இதன் படி, சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரும் நியாயமான பங்கைப் தங்களுக்கெனப் பெறுகிறார்கள். எடுத்துக்காட்டாக, கல்வி என்றால், பணக்காரர்களுக்குக் கிடைப்பதைப் போன்ற வாய்ப்புகள் ஏழைக்கும் கைகூட வேண்டும்.

இப்படிப்பட்டப் பகிர்வானது முறையாக சென்று சேர்வதற்காக சட்டத்தின் பாதுகாப்பு இருக்க வேண்டும். அதாவது ஒருவர் தமக்குரியதைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது என்றால், சட்டப்பூர்வமாக அதுப் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இதுவே சட்ட நீதி என அறியப்படுகிறது.

மூன்றாவதாக பரிமாற்ற நீதி. இது சரிசமமானவர்களுக்கு இடையேயான நீதி. அதாவது ஒருவர் ஒருப் பொருளை உற்பத்திச் செய்கிறார் என்றால், அதற்கான கைம்மாறு அவருக்குக் கிடைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒருவர் நெற்பயிர் விவசாயம் செய்கிறார் என்றால், அவர் உற்பத்திச் செய்யும் நெல்லுக்கு ஏற்ற பணம் கிடைக்க வேண்டும்.

இவை மூன்றும் இணைந்ததே சமூக நீதி. சட்ட நீதியானது சமூக நீதிக்காக குரல் கொடுப்பதாக விரிவடைய வேண்டும். அரசை வழிநடத்துதல், பிரச்சனைகள் இல்லாமல் சமூகத்தை வழிநடத்துதல் போன்றவை மட்டுமாக சட்டத்தின் பங்கு ஒதுங்கக் கூடாது. அது ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டோர் ஆகியோருக்கு நீதி வழங்கும் முறையாக மாற வேண்டும். பூமியின் வளங்கள் அனைவருக்கும் உரியது, அது அனைவருக்கும் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டியது சட்டத்தின் பொறுப்பு. வேலை, தனிச்சொத்து, கல்வி, பொருளாதாரம் ஆகிய அனைத்தும் மாண்பு மிக்க மனித வாழ்விற்கு அவசியம். அவை கிடைக்கிறதா என்பதை சட்டம் உறுதி செய்ய வேண்டும். மேலும், பல்வேறு உற்பத்திச் செய்பவர்கள், அது குடிசைத் தொழில், சிறு மற்றும் குறுந்தொழில் ஆகியோர் அனைவரும் தங்களுடைய உற்பத்திக்கு ஊதியம் பெற வேண்டும். இதில் பெரும் முதலாளிகள் சிறு உற்பத்தியாளர்களை பாதிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது. இதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

ஆக நாம் இன்று நீதிப் பற்றிப் பார்த்தோம். அது கடவுளுக்கு அளிக்கும் நீதி மற்றும் அயலானுக்கு அளிக்கும் நீதி எனப் பிரித்துப் பார்த்தோம். நேர்மையுடன் வாழ்வோம். அப்போதுதான் நீதிமிகு கடவுள் நமக்கு நீதி வழங்குவார்.





Post a Comment

0 Comments