Episode 92, Docat 31 – நற்சமூகத்திற்கான அடிப்படை மதிப்பீடுகள் – உண்மை, சுதந்திரம், நீதி - 3

இன்றைய அத்தியாயத்தில் நாம் DOCAT நூலிலிருந்து 107 ஆம் எண்ணில் காணப்படும்  உண்மையைப் பற்றியச் சிந்தனைகளைப் பார்க்க இருக்கிறோம்.

அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாங்கள் கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகிறோம்... வெளிவேட மற்ற அன்பு ... கொண்டிருக்கிறோம்; உண்மையையே பேசி வருகிறோம்; கடவுளின் வல்லமையைப் பெற்றிருக்கிறோம். நேர்மையே எங்கள் படைக்கலம். அதை வலக்கையிலும் இடக்கையிலும் நாங்கள் தாங்கியுள்ளோம்எனப் பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் ஆறாவது அதிகாரம் நான்கு தொடங்கி ஏழு வரையிலான இறைவார்த்தைகளில் கூறுகிறார். பவுலடியார் பொய்களின்றி எப்படி உண்மையுடன் தன்னுடயைப் பணியை ஆற்றினார் என்பதை இவ்வார்த்தைகள் படம்பிடித்தக் காட்டுகின்றன.

உண்மையைப் பற்றி பலர் பேசக் கேட்டிருக்கிறோம். உண்மை என்றால் என்ன? நான் கூறுவது எல்லாம் உண்மை, பொய்யல்ல என பலர் கூறக் கேட்டிருப்போம். உண்மை என்பது ஒருக் கொள்கையா? அல்லது கோட்பாட்டுத் திரட்டா? அல்லது சில விதிமுறைகளின் தொகுப்பா? கடவுள் வெளிப்படுத்தியதும் விவிலியத்தில் காணக்கிடப்பதுமான காரியங்கள் உண்மை என்றும் நாம் கேட்டிருக்கிறோம்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி தனி மனித வாழ்வில் உண்மைப் பெற்றிருக்கும் முக்கியத்துவம் என்ன? நான் எப்படி உண்மையாக இருக்க முடியும்? நண்பர்கள் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும், கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நாம் கேட்டிருக்கிறோம். இது, ஒரு கொள்கையை உண்மை என ஏற்றுக் கொள்வதல்ல. மாறாக உறவுகளில் உண்மைத்தனத்துடன் செயல்படுதல், உறவுகளில் நேர்மையை கடைப்பிடித்தல் என்றெல்லாம் அர்த்தம் பெறுகிறது. இது தனி மனித ஒழுக்க நெறியைச் சார்ந்த ஒரு விஷயமாக இருக்கிறது. தனிமனித வாழ்வில் உண்மை என்பது இருக் காரியங்களை உள்ளடக்கியது.

1.                   1. நேர்மை

2.                   2. ஒளிவுமறைவற்றத் தன்மை அல்லது வெளிப்படைத்தன்மை

குடும்ப உறவில், நட்புறவில், செய்யும் தொழிலில் இவை இரண்டும் இருக்க வேண்டும். குடும்ப உறவுகளில் இவை மறையும் போது தாம்பத்திய உறவும், குடும்ப வாழ்வும் சிக்கலை சந்திக்கும். இது யாரும் நம்மீது திணிக்கின்ற ஒரு குணமல்ல, மாறாக தனிமனிதர் ஒவ்வொரும் தேர்ந்துக் கொள்ளும் வாழ்க்கை முறை.

இன்று, செய்யும் தொழிலில் நேர்மையில்லை, சந்தைகளில் வருகின்ற பொருட்கள் போலியாக இருக்கின்றன போன்ற பலக் குற்றச்சாட்டுகளை நாம் கேட்டிருப்போம். இவையெல்லாம் தனிமனிதர் நேர்மையாக இல்லாததாலும், செய்கின்ற காரியங்களில் வெளிப்படத்தன்மை இல்லாததாலும் ஏற்படுகின்ற சமூகத் தீமைகளாகச் சுட்டிக் காட்ட முடியும். ஆக தனிமனிதர்கள் நேர்மையாக இல்லையென்றால் அது சமூகத்தை பாதிக்கும் பெருந்தீமைகளாக மாறிவிடும் என்பதை திருச்சபையானது அறிவுறுத்தி எச்சரிக்கிறது. உண்மையற்ற நிலை இன்று சமூகத்தில் எல்லாத் தளங்களிலும் காணப்படுகிறது. பொதுத்துறை அலுவலகங்கள், வங்கிகள், அரசியல், கல்வித்துறை என இத்தீமையானது தன்னுடைய வேர்களை இறங்கச் செய்து, சமூக வாழ்வின் அடிப்படைகளை பூச்சிப்போல் அரித்துக் கொண்டிருக்கிறது.

தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்” (மத் 5:8) என இயேசு மலைப்பொழிவின் வேளையில் கூறினார். இதயத்தில் களங்கங்கள் இன்றி தூய உள்ளத்துடன் வாழ வேண்டும் என்பதை இயேசு அறிவுறுத்துகிறார்.

வாரன் புஃபே என்பவர் இவ்வாறு கூறுகிறார்: “உண்மைப் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டால், என்னப் பொய் சொன்னீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.”   




Post a Comment

0 Comments