Episode 91, Docat 30 – நற்சமூகத்திற்கான அடிப்படை மதிப்பீடுகள் – உண்மை, சுதந்திரம், நீதி - 2

இன்றைய அத்தியாயத்தில் நாம் DOCAT நூலிலிருந்து 106 ஆம் எண்ணில் காணப்படும் சுதந்திரம் பற்றிப் பார்க்க இருக்கிறோம்.

கடந்த அத்தியாயத்தில் நற்சமூகத்திற்கான அடிப்படைகளாக உண்மை, நீதி, சுதந்திரம் போன்றவற்றைப் பற்றி நாம் பார்த்தோம். இன்று நாம், சுதந்திரத்தைப் பற்றி விளக்கமாகப் பார்க்க இருக்கிறோம்.

மனிதருக்குக் அளிக்கப்பட்டிருக்கும் மிகப்பெரியக் கொடை எதுவெனில் சுதந்திரம். அதாவது, எது வேண்டும் எது வேண்டாம் என்று தேர்ந்துக் கொள்வதற்கானச் சுதந்திரம்என்று சோரன் கீர்க்ககார்ட் என்னும் மெய்யியலார் கூறுகிறார்.

இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன்என்று இணைச்சட்டம் நூல் 30 ஆம் அதிகாரம் 15 ஆவது வசனத்தில் வாசிக்கிறோம். வாழ்வையும் நன்மையையும் தேர்ந்தெடுப்பதற்கானச் சுதந்திரத்தைக் கடவுள் தந்திருக்கும் அதே வேளையில், சாவையும் தீமையையும் தேர்ந்தெடுப்பதற்கானச் சுதந்திரத்தையும் தந்திருக்கிறார். எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்னும் சுதந்திரம் நமக்கு உள்ளது.

விலங்ககுகளையும் மனிதரையும் வேறுபடுத்துகின்ற மிகப்பெரியக் காரியம் எதுவெனில் சுதந்திரம். மனிதரைக் கடவுளைப் போல ஆக்குகின்ற மிகப்பெரிய குணமும் சுதந்திரமே. இக்குணத்தை நாம் எதற்காகப் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியமானது. கடவுள் நமக்குத் தந்திருக்கும் சுதந்திரமானது தவறாகப் பயன்படுத்துவதற்காக அன்று மாறாக, சரியாக பயன்படுத்துவதற்காகவே. அதாவது நாம் நன்மைகளைத் தேர்வுச் செய்ய வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். அதற்காகவே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். புனித பவுல் கூறுகிறார்:  நாம் கடவுளின் கைவேலைப்பாடு; நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்” (எபே 2:10).

சுதந்திரம் ஒருவரை மாண்புமிக்கவராக மாற்றுகிறது. வாழ்விற்கானப் பொறுப்பையும், கடவுளை வாழ்வில் ஏற்க வேண்டும் என்னும் பொறுப்பையும் நிலைவாழ்விற்கானப் பொறுப்பையும் சுதந்திரம் ஒருவருக்குக் கொடுக்கிறது.

வாழ்விற்கானப் பொறுப்பில், தனது வாழ்க்கை நிலையைத் தேர்ந்தெடுப்பதற்கானச் சுதந்திரம் ஒருவருக்கு அளிக்கப்படுகிறது. அதாவது கடவுள் தன்னை திருமண வாழ்விற்காக அழைக்கிறாரா?, அவரது பணிக்காக அழைக்கிறாரா? என்றெல்லாம் தீர்மானம் எடுப்பதற்கான உரிமையை கடவுள் சுதந்திரம் வழியாக அளிக்கிறார். அது மட்டுமல்லாமல், எத்தகைய வேலையைச் செய்ய வேண்டும், எத்தொழிலை நடத்த வேண்டும் என்றெல்லாம் தீர்மானம் எடுப்பதற்கான உரிமையானது மனிதர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

தன்னுடைய உள்ளார்ந்த இயல்பு என்ன? எந்த வாழ்க்கையை அல்லது தொழிலைச் செய்தால் தன்னுடைய வாழ்க்கையை மகிழ்ச்சி மிக்கதாகவும், நிறைவுடையதாகவும் ஆக்க முடியும் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை கடவுள் சுதந்திரம் வழியாக அளிக்கிறார்.

ஒருவருக்குக் கருத்துச் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. விரும்பிய மதத்தை, அரசியல் சித்தாந்தத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதலெல்லாம் தனி மனிதருக்கு அளிக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தின் பகுதியாக இருக்கிறது. இத்தகைய உரிமைகளை மனிதர்கள் அனுபவிப்பதற்கு ஏதுவான அரசியல் சட்டங்கள் இருக்க வேண்டும் என்பதையும் DOCAT நூலானது அறிவுறுத்துகிறது. இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் அனைத்து மனிதர்களுக்கும் கருத்துச் சுதந்திரமும், மதச்சுதந்திரமும் அரசியல் சாசனத்தின்படி அளிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை அனுபவிப்பதில் சிக்கல்கள் இன்றைய சமூகத்தில் பெருகி வருகிறது.

நாம் பெற்றிருக்கும் சுதந்திரத்தைப் பொறுப்புமிக்கவர்களாகப் பயன்படுத்தி, தனிமனித வாழ்வை மேம்படுத்துவதோடு, சமூக வாழ்வையும் மேம்படுத்த முயற்சிப்போம்.



Post a Comment

0 Comments