Episode 90, Docat 29 – நற்சமூகத்திற்கான அடிப்படை மதிப்பீடுகள் – உண்மை, சுதந்திரம், நீதி - 1

இன்றைய அத்தியாயத்தில் நாம் DOCAT நூலிலிருந்து 104 மற்றும் 105 எண்களில் காணப்படும் நற்சமூகத்திற்கான அடிப்படை மதிப்பீடுகளான, உண்மை, சுதந்திரம், நீதி ஆகியவைப் பற்றிப் பார்க்க இருக்கிறோம்.

கத்தோலிக்க சமூக படிப்பினையின் மூலக்கோட்பாடுகளாக

1.   தனிமனித மாண்பு பற்றிய கோட்பாடு – the principle of the human person

2.   பொதுநலம் பற்றிய கோட்பாடு - the principle of the human common good

3.   துணை அமைப்பு முறை பற்றிய கோட்பாடு – the principle of subsidiarity

4.   ஒருமைப்பாடு பற்றிய கோட்பாடு – the principle of solidarity

ஆகியவற்றைப் பார்த்தோம். இவை மட்டும் நற்சமூகத்தைக் கட்டி எழுப்புமா என்றால், நிச்சயமாக இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும். இவற்றைத் தாண்டி தனிமனிதர்களும் சமூகமும் கொண்டிருக்க வேண்டிய மூன்று அடிப்படை மதிப்பீடுகள் உள்ளன. அவையாவன: உண்மை, சுதந்திரம் மற்றும் நீதி. சமூக வாழ்வை ஒழுங்குப்படுத்துவதற்கான நெறிமுறைகளை மூலக்கோட்பாடுகளான தனிமனித மாண்பு, பொதுநலம், துணை அமைப்பு முறை மற்றும் ஒருமைப்பாடு முன்வைக்கிறது என்றால், நன்னெறி மதிப்பீடுகளான உண்மை, சுதந்திரம் மற்ம் நீதி ஆகியவை மாண்பு மிக்க வாழ்வை வாக்களிக்கிறது. இம்மதிப்பீடுகள், மானிடர் ஒவ்வொருவரும் கடவுளின் உருவில் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்னும் விவிலியப் படிப்பினையை அடிப்படையாக் கொண்டு உருவம் கொள்கின்றன. ஆகையால் இவை மீறப்படாத அடிப்படை உரிமைகளாக மாறுகின்றன.

இன்று யார் உண்மையாய் இருக்கிறார்? யார் நீதியுடன் செயல்படுகிறார்? அரசியல், சாதிய அடக்குமுறைகள் மனதரின் சுதந்திரத்தைப் பறிக்கின்றன என்றெல்லாம் நாம் ஆதங்கப்படலாம். உண்மை, நீதி என வாழ்வதால் எப்பயனும் இல்லை; அதி முட்டாள்தனம் என்றும் பெருவாரியான மக்கள் நம்புகிறார்கள். மகாத்மா காந்தி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்:

உண்மையும் நீதியும் எப்போதும் வெற்றிப் பெற்றிருக்கின்றன என்பதை மானிட வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது. சர்வாதிகாரிகளும் கொலைஞர்களும் ஆண்டிருக்கிறார்கள், வெற்றியாளர்களாக அவர்கள் தோன்றினாலும் அது நீண்டகாலம் நீடிக்கவில்லை. அவர்கள் வீழ்ந்திருக்கிறார்கள். இதை எப்போதும் நினைவில் கொள்க.”

உண்மையற்ற நிலை, நீதியற்ற வாழ்வு ஆகியவை தற்காலிகமான பொருளாதார முன்னேற்றத்தையும் சுகவாழ்வையும் கொண்டு வரும் என்பது உண்மையே. ஆனால் அவைகள் அடுத்தத்தலைமுறைகளுக்குப் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. இதைச் மனதில் கொண்டு செயல்படுதல் அவசியம் என்பதை மகாத்மா காந்தி அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

வசதியான வாழ்விற்கான மோகம், நம்மைப் பற்றி மட்டுமே சிந்திக்க வைக்கிறது. அவ்வாழ்வு பிறரின் அழுகையை கேட்க முடியாத வண்ணம் இதயத்தை கடினமாக்கி விடுகிறது. நீர்க்குமிழ் போல் நீடிக்கும் இவ்வாழ்வு உள்ளர்த்தற்றதாக மாறிவிடுகிறது. உள்ளத்தில் வெறுமை குடிபுகுந்து விடுகிறது. வாழ்வு நிரந்தரமான ஏதுமின்றி அர்த்தமற்று தவிக்கிறதுஎன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறுகிறார்கள்.

உண்மை, சுதந்திரம் மற்றும் நீதி ஆகிய மதிப்பீடுகளுடன் அன்பும், இரக்கமும் கூடுதலாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மனித சமூகம் முறையாக வாழ முடியாது. புனித தோமஸ் அக்யுனாஸ் அவர்கள், இரக்கமற்ற நீதி என்பது கொடூரமானது; நீதியற்ற இரக்கம் அனைத்து சீர்கேடுகளுக்கும் மூல காரணமாகி விடுகிறதுஎன்று எச்சரிக்கிறார். இரக்கமற்ற நீதியும் கூடாது, அதேவேளை நீதியற்ற இரக்கமும் கூடாது என்பது புனித அக்யுனாஸ் உணர்த்தும் பாடமாக இருக்கிறது. இரக்கம் கொள்ள வேண்டும் என்று ஆண்டவர் இயேசு நமக்குக் கற்பித்திருக்கிறார். ஆனால், அது நீதியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். இல்லையென்றால், சமூகச் சமநிலை கெட்டுப் போய் விடும்.



Post a Comment

0 Comments