Episode 89, Docat 28 – ஒருமைப்பாடு 2 Principle of Solidarity

இன்றைய அத்தியாயத்தில் நாம் DOCAT நூலிலிருந்து 100 முதல் 103 வரையிலான எண்களில் காணப்படும் ஒருமைப்பாடு பற்றிப் பார்க்க இருக்கிறோம்.

பறவைகளைப் போன்று வானில் பறப்பதற்காக நாம் கற்றுக் கொண்டோம்; நீரைப் போல தண்ணிரில் நீந்திட கற்றுக் கொண்டோம். ஆனால், பூமியில் சகோதரர் சகோதரிகளாக சேர்ந்துப் பயணிக்கக் கற்றுக்கொள்ளவில்லைஎன மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் கூறினார். சாதி, மதம், நிறம், இனம், ஆண்-பெண், கற்றார்-கல்லார், செல்வந்தர்-ஏழையர் எனப் பலவற்றால் பிரிந்துக் கிடக்கிறோம். ஒருவர் இன்னொருவரை விடப் பெரியவர் என காட்டிக் கொள்வதும், சுய நலங்களுக்காக மக்களைப் பிரித்தாள்வதும் இன்று வாடிக்கையாகி விட்டது. அனைத்து மனிதர்களிலிலும் கிறிஸ்துவின் உருவைக் கண்டுத் தோழமையுணர்வுடன் வாழ வேண்டியது கிறிஸ்தவர்களாகிய நம்மைப் பொறுத்தவரைக்கும் மிகவும் முக்கியமானது. இதுவே கிறிஸ்துவின் பிள்ளைகளுக்குரிய இயல்பாக இருக்க வேண்டும்.

உலகமயமாக்கலின் விளைவாக உலகமே இன்று கிராமமாகி விட்டது எனலாம். ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளுதல் எளிதாகி விட்டது. புதிய மனிதர்கள், புதிய கலாச்சாரங்கள், புதிய இசை என பல கண்டங்களைத் தாண்டி எங்கும் கிடைக்கின்றன. வெளிநாட்டவர்களின் பொருளாதார முதலீடுகள் பெருகி இருக்கின்றன. விரும்பும் ஆடைகள், விரும்பும் உணவு, விரும்பும் வாகனங்கள், விரும்பும் வேலைகள் என எல்லாம் இன்று எல்லா நாடுகளிலும் சாத்தியமாகி இருக்கிறது. ஆனால், இது எல்லா மக்களையும் சென்றடைவதில்லை என்பது பெரும் சிக்கலாக இருக்கிறது. பணம் படைத்தோருக்கும் நகர்ப்புறங்களில் வாழ்வோருக்கும் இத்தகைய வாழ்வானது சாத்தியமாகிறது. தொழிற்சாலைகள், இணையத் தொடர்புகள், தரமான கல்வி நிறுவனங்கள் ஆகியவை இல்லாத இடங்களில் வாழும் ஏழைகளுக்கு இத்தகைய வாழ்வு கைகூடுவதில்லை. இவ்வாறாக உலகமாக்கலின் விளைவாக, சில மனிதர்கள் அனைத்து வசதிகளும் பெற்றுக் கொண்டிருக்க பெரும்பான்மையான ஏழை மக்கள் எவ்வித வசதிகளும் இன்றி புறந்தள்ளப்படுகின்றனர். வசதியான வாழ்விற்கானப் போராட்டத்தில் அவர்கள் தங்கள் வாழ்வை இழக்கிறார்கள். இத்தகைய சவால் மிக்கச் சூழல்கள் நம்முடைய மத்தியிலும் நிலவுகிறது என்பதை அறிவோம். வசதிப் படைத்தோரும் ஆள்பலம் உள்ளவர்களும் அனைத்து வசதிகளும் பெற்று உயர்கின்றனர். மற்றவர்களோ எவ்வித வசதிகளும் இன்றிப் புறந்தள்ளப்படுகின்றனர். இதைத் திருச்சபை மிகுந்த வேதனையோடு பார்க்கிறது. இதைப் போக்குவதற்காக தேவையான முயற்சிகளைச் செய்ய வேண்டியது அரசுத் தலைவர்களின் கடமையாகவும் பொறுப்பாகவும் இருக்கிறது.

உலகமயமாக்கல், புலம்பெயர்தல் மற்றும் பெருந்தொற்றுகளை ஒன்று சேர்ந்து எதிர்கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. அதை நாம் கொரோனா போன்ற பெருந்தொற்றுக்களின் காலத்தில் கண்டோம்.

மேற்கண்ட சவால்களை கண்முன் கொண்டவர்களாக அதை எதிர்கொண்டு குறைகளைப் போக்கிட ஒன்றிப்பு என்னும் கோட்பாடு நம்மைப் பார்த்து அழைப்பு விடுக்கிறது. ஒன்றிப்பு என்பது இருப் பரிமாணங்களைக் கொண்டது.

முதலாவதாக, சமூகப் பரிமாணம். அதாவது, உலகமயமாக்கல் போன்றவைக் கொண்டு வந்திருக்கும் பாவம் நிறைந்த அமைப்புகளைப் போக்கிட உழைக்க வேண்டும். உள்ளவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கிறது, இல்லாதவர்களுக்கு எதுவும் இல்லை என்பது ஒரு பாவ அமைப்பு. இதைப் போக்கிட உழைக்க வேண்டியது நமது கடமை. பாவத்தின் கட்டமைப்புகளைக் களைந்து அன்பின் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை.

இரண்டாவதாக இது நன்னெறிப் பரிமாணத்தையும் கொண்டுள்ளது, அதாவது அறவாழ்வுக்கான அழைப்பை விடுக்கிறது. வெற்றுவார்த்தைகளால் அன்பு, கனிவு, தோழமை எனப் போதித்துத் திரியாமல் அதைச் செயல்முறைப் படுத்துவதற்கான வழிகளில் இறங்க வேண்டும். சமூகத்தில் வாழும் நாம் சமூகத்திற்கு கடன் பட்டவர்கள். ஆகையால் அதற்கேற்ப நற்செயல்கள் புரிந்து அனைவருக்கும் உதவி செய்யவும், பிறரின் வளர்ச்சியில் பங்கேற்கவும் உதவ வேண்டும்.

நாம் நம்பும் இயேசு கிறிஸ்து இதற்கான மாதிரியாக விளங்குகிறார். கடவுளின் மகன் என்பதை பெருமைக்குரியதாக அவர் கருதவில்லை. மனிதர்களை தன்னை விட தாழ்ந்தவர்களாக எண்ணவுமில்லை. அனைத்து மனிதர்களையும் நேசித்தார். பாவிகள், ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் அவரின் தனிப்பட்ட கவனத்திற்கும் அன்பிற்கும் பாத்திரமாயினர். அதனால்  தான், இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்” (மத் 11: 20) என்று இயேசுவைப் பற்றி பரிசேயர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

மதர் தெரசா கூறுவதை மனதில் கொள்வோம்: “பல மனிதர்களும் ஏழைகளைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் வெகுச் சிலரே ஏழைகளிடம் பேசுகிறார்கள்.  

நாம் ஏழைகளிடம் பேசுகிறவர்களாக மாறுவோம். 



Post a Comment

0 Comments