இன்றைய அத்தியாயத்தில் நாம் DOCAT நூலிலிருந்து 98 மற்றும் 99 ஆவது எண்களில் காணப்படும் ஒருமைப்பாடு பற்றிப் பார்க்க இருக்கிறோம்.
‘நான்,’ ‘எனது உலகம்,’ ‘பிறரைப் பற்றி நான் அக்கறைக் கொள்வதில்லை’ என்றெல்லாம் மனிதர்கள் கூறுவதைக் கேட்டிருப்போம். இக்கூற்றுகளில்
உண்மைகள் அடங்கியிருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. சொந்த உயிரையும்,
குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக மனிதர்கள் அன்றாடம் உழைக்க வேண்டும். பொருள்
ஈட்ட வேண்டும். மேலும் தன்னுடைய உயிரை நிலைநிறுத்த உண்ண வேண்டும். மாண்புமிக்க
வாழ்வு வாழ, சொந்த காலில் நிற்க வேண்டும். இத்தோடு தனிமனித வாழ்வு முடிவு
பெறுவதில்லை. கல்விக்காக, தொழிலுக்காக, நோய்நொடியற்ற வாழ்வு வாழ்வதற்காக, இடம்
விட்டு இடம் நகர்வதற்காக பிறரை சார்ந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. ஆக சொந்த
வாழ்வை நிலைநிறுத்த வேண்டும் என்றால், மனிதர்கள் பிறரை சார்ந்திருக்க வேண்டியது
கட்டாயமாக உள்ளது. கல்வி கற்றலை நெறிப்படுத்த வேண்டியதும், தொழில்துறையை
முறைப்படுத்த வேண்டியதும், மருத்துவ சேவையை ஒழுங்குப்படுத்த வேண்டியதும் அரசியல்
அதிகாரிகளின் கடமையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், கற்பித்தல் பணியில்
ஈடுபட்டிருப்பவர்களும் தொழில் நிறுவனங்களை நடத்துவோரும் மருத்துவ சேவையை
அளிப்போரும் தத்தமது கடமைகளைச் செய்ய வேண்டும். இவ்வாறாக அவரவர் தங்களது கடமைகளைச்
செய்வதன் வழியாக தங்களுடயை வாழ்வை சமூகத்தில் அமைத்துக் கொள்கிறார்கள். இவர்கள்
தங்களுடைய பணிகளைச் செய்வதன் வழியாக பொருள் ஈட்டுகிறார்கள், மனநிறைவுப்
பெறுகிறார்கள், மாண்பு மிக்க வாழ்வை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அவரவர் தத்தமது
கடமையை நிறைவேற்றுவதன் வழியாக, சமூகத்தில் உள்ள மற்ற மனிதர்களுக்கும்
உதவுகிறார்கள். இதை கடமையுணர்வோடு, பிறரின் நலனையும் கருத்தில் கொண்டு
நிறைவேற்றும் போது, சமூகம் சீராக செல்லும். இல்லையேல், ஏழைகளுக்கு தரமான
கல்வியும், வேலையும், உரிய மருந்தும் கிடைக்காமல் போகும். அவர்களின் உரிமைகள்
பறிக்கப்படும். இதில் இரண்டு காரியங்கள் அடங்கியுள்ளன.
1.
ஒருவர் தன்னுடைய சொந்த வாழ்வை அமைத்துக் கொள்வதற்காக சமூகத்தில் ஒரு
வேலையை செய்ய வேண்டும். அதன் வழியாக அவர் பொருள் ஈட்டுகிறார், நல்வாழ்வை அமைத்துக்
கொள்கிறார்.
2.
இரண்டாவதாக, அவர் இவ்வாறாக தன்னுடயை பணியை கடமையுணர்வுடன்
நிறைவேற்றுவதன் வழியாக சமூகம் நலன் பெறுகிறது. எடுத்துக்காட்டாக, அரசு
அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவர், கடமையுணர்ச்சியுடன் தன் பணியை செய்வாரென்றால்,
சான்றிதழுக்காக வரும் ஏழை ஒருவரை அலைக்கழிக்க வைக்கத் தேவையிருக்காது.
இதுவே ஒருமைப்பாடு எனப் புரிந்துக் கொள்ள முடியும்.
“சிறிய இடங்களில் வசிக்கும் சிறிய மனிதர்கள் செய்யும் சிறிய காரியங்களால்
உலகின் தரத்தை மாற்றி அமைக்க முடியும்” என தென்
ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோசா என்பவர் கூறுகிறார்.
ஆக சிறியவராயினும் பெரியவராயினும் அவரவர் தத்தமது கடமைகளை சரிவர
நிர்வகித்தால், இவ்வுலகில் பெரும் மாற்றம் ஏற்படும். மக்களாட்சி சரியாக அமைய
வேண்டுமென்றாலும் இதுவே அடிப்படை தத்துவமாக இருக்கிறது. குடிமக்கள் ஒவ்வொருவரும்
தங்கள் ஜனநாயக உரிமையான வாக்களித்தலை சரிவர செய்தால் மக்களாட்சி முறையாக அமையும்.
“மவுனத்தால் செபம் உருவாகிறது; செபத்தால்
இறைநம்பிக்கை உருவாகிறது; இறநம்பிக்கையால் அன்பு உருவாகிறது;
அன்பால் சேவை உருவாகிறது; சேவையால் உள்ள அமைதி
உருவாகிறது” எனப் புனித மதர் தெரசா கூறுகிறார்.
கடவுள் நமக்குத் தந்திருக்கும் திறமையைப் பயன்படுத்தி, பணி செய்வோம். அதன் வழியாக நாம் மாண்புடன் வாழலாம், சமூகமும் பயன்பெறும்.
0 Comments