Episode 95, DOCAT 34, குடும்பம்

இந்த அத்தியாயம் தொடங்கி வருகின்ற அத்தியாயங்களில் குடும்பம் பற்றிப் பார்க்க இருக்கிறோம். இன்றைய தினம் DOCAT நூலின் 112 மற்றும் 113 ஆவது எண்களில் கூறப்படும் குடும்பம் பற்றிய விவிலியக் கருத்துக்களை காண இருக்கிறோம்.

ஆண்டவராகிய கடவுள், மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதன்று...  எனக் கண்டு பெண்ணைத் துணையாகக் கொடுத்ததாக நாம் தொடக்க நூல் இரண்டாம் அதிகாரம் 18 ஆம் இறைவார்த்தையில் வாசிக்கிறோம். ஆக, மனிதர் ஆணும் பெண்ணுமாக சேர்ந்து வாழ குடும்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது கடவுளின் விருப்பமாக இருந்தது என்பதை திருவிவிலியம் கூறுகிறது.

சமூக உயிரியாக படைக்கப்பட்டிருக்கும் மனிதர் தனிமையாக இருப்பது சாத்தியமில்லை. வெகு சில மனிதர்கள் தங்கள் வாழ்வை தனிமையில் அமைத்துக் கொண்டாலும் பெரும்பான்மையான மக்கள் அப்படியில்லை. இயல்பிலேயே மனிதர்கள் ஒவ்வொருவரும் பிறரோடு சேர்ந்து வாழும் இயல்பைப் பெற்றிருக்கிறார்கள். இதை திருவிவலியத்தின் தொடக்கத்திலேயே நாம் பார்க்கிறோம். திருவிவிலியம் கூறுகிறது: “கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை. ஆகவே, ஆண்டவராகிய கடவுள் ... அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, ... ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்துவந்தார். அப்பொழுது மனிதன், “இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்என்றான்” ( தொநூ 2:20-23). மனிதர்கள் ஆணும் பெண்ணுமாக வாழ்வதற்கான இயல்பைப் பெற்றிருக்கிறார்கள் என்றும் குடும்பமாக உருவாக வேண்டும் என்றும் கடவுள் திருவுளம் கொண்டார் என்பதை திருவிவிலியம் கூறுகிறது.

அடுத்தத் தலைமுறைக்கு விசுவாசத்தை அளித்தல் என்பது குடும்பங்களின் கடமை என்பதை பழைய ஏற்பாடு நமக்குக் கூறுகிறது. கடவுள் வாக்குறுதிகளில் நம்பிக்கைக்குரியவர், அன்பும் நீடித்தப் பொறுமையும் உடையவர் என்பதை பிள்ளைகளுக்குக் கூறி வளர்க்க வேண்டும் என்பது கடவுள் குடும்பங்களுக்குக் கொடுத்தக் கட்டளையாக இருந்தது. புதிய ஏற்பாட்டில் ஆண்டவராகிய இயேசு குடும்பத்தில் பிறந்ததாக நமக்குக் கற்பிக்கிறது. நாசரேத் என்னும் ஊரில், மரியாவுடனும் யோசேப்புடனும் குடும்பமாக இயேசு வாழ்ந்தார். அவர் ஓர் இயல்பான, சாதாரணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். இக்குடும்பமானது உலகின் அனைத்துக் குடும்பங்களுக்கும் மாதிரியாக தரப்பட்டிருக்கிறது.

நாசரேத் குடும்பம் குடும்ப வாழ்வின் இலக்கணத்தை நமக்கு வகுத்துத் தருகிறது. அக்குடும்பம் அன்பின் குடும்பம்; மாண்பின் குடும்பம். அக்குடும்பம், குடும்ப வாழ்வின் மாண்பையும் அழகையும் அது எடுத்துக் கூறுகிறது. குடும்ப வாழவு என்பது பிளவற்றதாய், உரிமைகளை சரியாகக் கற்பிக்கின்ற தளமாய், அன்பும் அரவணைப்பும் நிறையும் நல்லச் சூழலைக் கொண்டதாய், குழந்தைகளை உருவாக்கும் பயிற்சித் தளமாய் இருக்கிறது என்பதை திருக்குடும்பம் கூறுகிறது. இது சமூகத்தின் பிரிக்கமுடியாக அலகாக நல்ல மனிதர்களை உருவாக்கும் நிலையமாய் இருக்கிறது என்பதை திருக்குடும்பம் உணர்த்துகிறது என்றுத் திருத்தந்தை இரண்டாம் ஜாண்பால் கூறுகிறார்.

கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்…” (தொநூ 1:28) என்று முதல் குடும்பத்தை உருவாக்கியக் கடவுள் கூறினார்.



Post a Comment

0 Comments