Episode 86, Docat 25 – ஏழைகளும் பொதுநலனும்

 அனைவரையும் அன்பு செய்ய வேண்டும் என்பது கிறிஸ்தவர்களின் கடமையாக இருக்கிறது. இதில் சாதி, மதம், செல்வம், செல்வாக்கு என்று எதுவும் இருக்கக் கூடாது என்பது திருச்சபையின் படிப்பினையாக இருக்கிறது. திருச்சபை இன்னொன்றையும் குறிப்பாகச் சொல்கிறது. ஏழைகள் மீது தனி அன்பு செலுத்த வேண்டும் என்பதே அது. மற்றவர்களை அன்பு செய்வதை விடவும், அவர்களுக்கு காட்டும் அக்கறையை விடவும் ஏழைகள் பால் தனி அக்கறை காட்ட வேண்டும் என்றும் திருச்சபை கற்பிக்கிறது.

மகிழ்வும், எதிர்நோக்கும், ஏக்கமும் கவலையும், இன்றைய மனிதரின் வாழ்வில் குறிப்பாக ஏழைகள் மற்றும் துன்புறுவோர் அனைவரின் வாழ்வில் உள்ளன. இம்மனிதரின் மகிழ்வும் எதிர்நோக்கும், ஏக்கமும் கவலையும் கிறிஸ்தவர்க்கும் முற்றிலும் உரியனஎன இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின், இன்றைய உலகில் திருச்சபை என்னும் ஏட்டின் முதல் எண் கூறுகிறது. இதில், சங்கமானது குறிப்பாக ஏழைகள் மற்றும் துன்புறுவோர்என்னும் சொல்லாடலைப் பயன்படுத்துகிறது. இதை ஆங்கிலத்தில் preferential option for the poor என்னும் சொற்களால் விளக்கப்படுகிறது. அதாவது நாம் பிற மனிதர்களிடம் காட்டும் அன்பை விடவும் அதிகாமான அன்பையும் அக்கறையையும் ஏழைகளிடம் காட்ட வேண்டும் என்பது இங்கேத் தரப்படும் செய்தியாக இருக்கிறது. ஆகையால்

1.   விளிம்பு நிலையில் தள்ளப்பட்ட மக்களின் நலன் காக்க வேண்டியது தனிமனிதரின், குறிப்பாக கிறிஸ்தவர் ஒவ்வொருவரின் சமூகப் பொறுப்புணர்வின் முதன்மையான கடமையாக இருக்கிறது.

2.   திருச்சபையின் சமூக ஈடுபாட்டில் முதன்மையான இடத்தில் ஏழைகள் இருக்க வேண்டும். திருச்சபையின் சமூகப் பணிகளின் தலையாய கடமையாக ஏழைகளின் ஏற்றம் அமைய வேண்டும்.

இயேசுவின் மலைப்பொழிவில் ஏழைகள் முதன்மையான இடத்தைப் பெறுகிறார்கள். இரண்டாவதாக இயேசு ஏழையாகப் பிறந்து வாழ்ந்தார். மூன்றாவதாக, அவர் ஏழைகளின் மீது தனிப்பட்ட அன்பு காட்டினார். இவை மூன்றும் ஏழைகளுக்கான நம் பணியில் வழிகாட்டுதல்களாக அமைய வேண்டும்.

இயேசு அளித்தக் கட்டளையும் நமக்கு உள்ளது: “மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத் 25:40). ஏழைகளில்லாத முழுமையான சமூகம் ஏற்படுவது இவ்வுலகில் சாத்தியமாகாது என்றும் அது இயேசுவின் மறுவருகையின் போதுதான் நிஜமாகும் என்பதையும் இயேசு கூறியிருக்கிறார். இதை நாம் மத்தேயு நற்செய்தி 26 ஆம் அதிகாரம் 11 ஆம் வசனத்தில் பார்க்கிறோம். – ஏழைகள் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள்.

ஏழைகள் மீது காட்ட வேண்டிய அன்பைப் பற்றி யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் பின்வருமாறு கூறுகிறார்: “ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, “நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள்;” என்பாரென்றால் அதனால் பயன் என்ன? அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.” (யாக் 2: 15-17).

மகாத்மா காந்தி அவர்களின் கூற்றையும் நினைவில் கொள்வோம்: “ஒவ்வொருவரின் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமான வளங்கள் உலகில் உள்ளன; பேராசைகளைப் போக்க அல்ல”.



Post a Comment

0 Comments