Episode 85, Docat 24 – தனிச்சொத்துரிமையும் அதன் வரம்புகளும்

 பொதுநலம் பற்றி நாம் கடந்த அத்தியாயங்களில் பார்த்தோம். குறிப்பாக இயற்கை வளங்கள் அனைத்தும் அனைவருக்கும் சொந்தமானது என்பதைப் பற்றியும் அறிந்தோம். அதே வேளையில் தனிச்சொத்துரிமையை திருச்சபை ஆதரிக்கிறது. தனிச்சொத்துரிமை என்பது மனித மாண்புடன் தொடர்புடையது. திருத்தந்தை புனித இரண்டாம் ஜாண் பால் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்:

தன்னுடையது என்று எதன் மீதும் உரிமை கொண்டாட முடியாத மனிதர், தன்னுடைய உழைப்பால் தனக்குத் தேவையானவற்றை சேகரிக்கும் வாய்ப்பற்ற மனிதர், அன்றாட உணவுக்காகவும் மற்று தேவைகளுக்காகவும் சமூக அமைப்பையும் அதை கட்டுப்படுத்துபவர்களையும் நம்பும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். இதன் வழியாக மனிதர் தம்முடைய மாண்பை இழக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது. இதன்வழியாக, சுயசார்புடைய மாண்புமிக்க மனித சமூகத்தை கட்டியெழுப்பிடும் சூழல் இல்லாமல் போய்விடுகிறது.

தனிச்சொத்துரிமை என்பது மனித மாண்போடு பிணைக்கப்பட்டது என்பதையும், மாண்புமிக்க நற்சமூத்தை உருவாக்கவும், அதை கட்டியெழுப்பவும் தனிச்சொத்துரிமை அவசியம் என்பதை திருத்நத்தையின் இந்த வார்த்தைகள் தெளிவாக்குகின்றன. சாதிய கட்டமைப்புகள் மூலமாக சமூக நீதி மறுக்கப்பட்ட மக்கள் நிலத்தை இழந்து தவிப்பதை தமிழகத்தின் பல நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகிறது. பூர்வ குடிகளாக உள்ள மக்கள் பலர் நிலமின்றியும், நிலம் பறிக்கப்பட்டும் வாழ்கின்றனர்.

தனிச்சொத்துரிமை இல்லை என்றால் அச்சமூகம் சோம்பல் நிறைந்ததாக மாறுவதோடு, அந்நிலை பொறுப்பற்ற மக்களினத்தை உருவாக்கி விடும். ஆகையால், பொறுப்புள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றால் தனிச்சொத்துரிமை அவசியம்.

அதே வேளையில் சொத்து மற்றும் செல்வம் சேர்ப்பதில் வரம்புகள் அவசியம் என்பதை திருச்சபை அறிவுறுத்துகிறது. தனக்காக சொத்தொ ஒருவர் சேகரிக்கும் போது, அது பொதுநலனை மனத்தில் கொண்டதாக இருக்க வேண்டும். தனிச்சொத்துரிமையானது உலகின் வளங்களை நேர்த்தியான முறையில் கையாள்வதற்காக் கொடுக்கப்பட்டிருக்கிறது. வளங்கள் அனைத்தும் அனைவருக்கும் சொந்தம் என்று கூறும் போது, அதைப் பேணும் போக்கானது இல்லாமல் போய்விடும். அரசு பராமரிப்பில் இருக்கும், பேருந்து நிலையங்கள், கழிப்பிடங்கள், சந்தைகள் போன்றவை எப்படி பராமரிக்கப்படுகின்றன என்பதை நாம் அறிவோம். அதே வேளையில் தனிமனிதருக்குச் சொந்தமான இடங்கள் சரியான முறையில் பேணப்படுகின்றன. இதில் முக்கியமான விஷயத்தை தனிச்சொத்துரிமை ஆனது முன் வைக்கிறது.

இயற்கையில் கிடைக்கப்பெறும் வளங்கள் பொது நலனை கருத்தில் கொண்டு கையாளப்பட வேண்டும். தனிமனிதர் ஒருவர் தன்னுடைய நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு, தன்னுடைய சொத்துக்களை பராமாரித்து விட்டு, மற்ற மனிதர்களின் நலனைப் பேணவில்லை என்றால் அவர் தம் கடமையிலிருந்து தவறுகிறார் என்று அர்த்தம். ஆக, நிலபுலன்கள் அனைத்தும் பொதுநலனை கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும். பிற நலனுக்கு கேடு ஏற்படுத்த விட்டு, தன்னுரிமையையும் சொத்துக்களை சேகரித்தலும் பாவம் என்று திருச்சபை போதிக்கிறது.

உழைத்தோ அல்லது பிச்சை எடுத்தோ பிழைப்பதற்கான வாய்ப்புகள் முற்றிலும் தடைப்படும் போது ஒருவர், தன்னுடைய உயிரைக் காக்கவும் உடல் நலனைக் பேணவும் தனக்குத் தேவையானதை (உலகிலிருந்து) எடுத்துக் கொள்ளலாம் என்று ஜோசப் கார்டினல் பிரிங்ஸ் என்னும் ஜெர்மன் நாட்டு கொலோன் மறைமாவட்டப் பேராயர் 1946 ஆம் ஆண்டு கூறினார். இரண்டாம் உலகப்போர் முடிந்து மக்களுள் பலர் பட்டினியாலும் நோயாலும் மடிந்த போது இதை அவர் கூறினார். இயற்கையின் வளங்கள் தனிமனிதரின் பசியை போக்க வேண்டும், உடல் நலனைப் பேண வேண்டும் என்பது பேராயரின் கூற்றின் உள்ளர்த்தமாக உள்ளது. அப்படி இல்லையென்றால், தனிச் சொத்துரிமை என்பது அநியாயம் நிறைந்ததாகவும் கடவுளின் திட்டத்திற்கு எதிரானதாகவும் மாறும்.




Post a Comment

0 Comments