“ஒவ்வொரு மனிதருக்கும், மக்கள் யாவருக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காகவே கடவுள் மண்ணுலகையும் அதில் உள்ள அனைத்தையும் ஆக்கினார். எனவே படைப்பு நலன்கள் அனைத்தும் நீதியை வழிகாட்டியாகவும் அன்பைத் துணையாகவும் கொண்டு, சரிசமமாக எல்லா மனிதருக்கும் உரியதாக இருக்க வேண்டும்” என்று இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின், இன்றைய உலகில் திருச்சபை என்னும் ஏட்டின் 59 ஆம் எண் கூறுகிறது.
கடவுள் உலகைப்
படைத்தார் என்றும் அதில் உள்ள அனைத்து வளங்களையும் அவரே உருவாக்கினார் என்பதும்
நமது விசுவாசம். இப்படியாக படைக்கப்பட்டவை அனைத்தும் அனைவருக்கும் சொந்தமாக இருக்க
வேண்டும், அதே வேளையில் அது அனைவருக்கும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். இயற்கை
வளங்களைப் பகிர்வதில் நீதியும் அன்பும் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். இதை
திருச்சபை உறுதியாக வலியுறுத்துகிறது.
சிலர் எல்லா
வளங்களும் பெற்றிருக்க, பலர் அவசிய தேவைகளை நிறைவேற்றக் கூட போதிய வளங்கள்
இல்லாமல் தவிக்கும் போக்கானது இன்றைய உலகில் நிலவுகிறது. தனிச்சொத்துரிமையை
திருச்சபை ஆதரிக்கிறது என்றாலும், மட்டுமீறிய முறையில் செல்வம் சேர்ப்பதையும்
நிலபுலன்களை சொந்தமாக்குவதையும் திருச்சபை வன்மையாக கண்டிக்கிறது. இன்றைய உலகில்
ஏழை – பணக்காரர் ஏற்றத் தாழ்வுகள் பெரிய அளவில் காணப்படுகிறது. இது, மட்டுமீறிய
பொருளாசை மற்றும் அதிகார ஆசை என்பதில் எந்தவித ஐயமுமில்லை. இதன் வழியாக ஏழைகள்
உருவாக்கப்படுகிறார்கள். இது கிறிஸ்தவ மனநிலையும் அல்ல; விவிலியம் முன்வைக்கும் செய்தியும் அல்ல. திருத்தந்தை
பதினாறாம் பெனடிக்ட் இவ்வாறு கூறுகிறார்: “நற்செய்தியானது
ஏழைகளின் நல்வாழ்வையே முதன்மையாகக் கொண்டுள்ளது.”
ஏழைகளுக்கு
உதவுதலை நல்ல காரியமாக நாம் பார்க்கிறோம். நாமும் ஏழைகள், அனாதை இல்லங்களில்
வாழ்வோர் ஆகியோருக்கு உதவி செய்வதுண்டு. உணவு கொடுத்தல், பணம் பொருட்களை
சேகரித்துக் கொடுத்தல் ஆகியவற்றை நாம் மேற்கொள்வதுண்டு. இவற்றை நாம் தர்மம்,
பிரறன்புப் பணிகள் என்றெல்லாம் பெயரிட்டு அழைப்பதுண்டு. ஆனால், நீதிக்காக குரல்
கொடுக்க வேண்டியதும், ஏழைகளின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவும் நாம்
முயற்சிக்கிறோமா? என்னும் கேள்வி எழுகிறது. அநியாயமாக சம்பாதித்தப் பணத்தில் வழியோரத்தில்
வாழ்பவர்களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் உணவு கொடுத்தல் கிறிஸ்தவ நன்னெறி அல்ல.
கடவுள் எசாயா
இறைவாக்கினர் வழியாக பின்வருமாறு கூறுகிறார்:
“என்னை நோக்கி உங்கள் கைகளை நீங்கள் உயர்த்தும் போது, பாரா முகத்தினனாய் நான் இருப்பேன்; நீங்கள்
தொடர்ந்து மன்றாடினாலும் நான் செவிகொடுப்பதில்லை; உங்கள்
கைகளோ இரத்தக் கறையால் நிறைந்திருக்கின்றன. உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்;
உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்; தீமை செய்தலை விட்டொழியுங்கள்; நன்மை செய்யக்
கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு
நீதி வழங்குங்கள்; கைம்பெண்ணுக்காக வழக்காடுங்கள்” (எசா 1: 15-17).
அநியாயமாக
சம்பாதித்தக் கரங்களுடன் கடவுள் முன் செபித்தால், அதில் இரத்தக்கறை
படிந்திருப்பதைக் கடவுள் பார்ப்பார். ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்தல்,
திக்கற்றோருக்கு நீதி வழங்குதல், கைம்பெண்களுக்காக வழக்காடுதல் போன்றவற்றை
செய்தால் கைகளில் படிந்திருக்கும் இரத்தக் கறை அகலும், செபங்கள் ஏற்கப்படும்
என்பது விவிலியம் சொல்லும் பாடமாக இருக்கிறது.
இன்று கையூட்டு
வாங்குதல், ஊழல் புரிதல், அநியாயமாக சம்பாதித்தல், பன்மடங்கு லாபம் பெறுதல்,
கோடிகளை சம்பாதித்தல், பணத்திற்காக பிறரை ஏமாற்றுதல், ஆள் கடத்தலில் ஈடுபடுதல்,
பிறரை அழித்தல், போன்றவை எல்லாம் நல்ல காரியங்களாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால்,
இதனால் பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்கள், அதிகாரமற்ற மக்கள் போன்றவர்களின்
குரல்கள் கடவுளை நோக்கி நிரந்தரமாக எழுப்புகின்றன. அநியாயம் புரிவோரின் கைகளில்
இரத்தக் கறை படிந்திருக்கிறது என்பது விவிலியம் தரும் பாடம். இதை புரிந்து செயல்பட
இளையோராகிய நாம் முற்படுவோம்.
டோம் எல்டி
காமறா என்னும் பிரேசில் நாட்டு பேராயர் பின்வருமாறு கூறுகிறார்: “நான் ஏழைகளுக்கு உணவு கொடுத்தப் போது அவர்கள் என்னை
புனிதர் என்று அழைத்தனர். ஏன் அவர்கள் ஏழைகளாக இருக்கின்றனர்? என்று கேள்வி எழுப்பிய போது, என்னை கம்யூணிஸ்ட் என்று முத்திரை
குத்துகின்றனர்.”
0 Comments