Episode 83, Docat 22 – பொதுநலம் என்றால் என்ன?

கடந்த அத்தியாயத்தில் பொதுநலத்திற்கான வரையறையைப் பார்த்தோம். அதாவது, குழுக்களும் தனி உறுப்பினர்களும் தத்தம் நிறைவை அதிக முழுமையோடும் மிக எளிதாகவும் அடைவதற்கு உதவுகின்ற சமூக வாழ்வுச் சூழ்நிலைகளின் தொகுப்பே பொதுநலன் என்றழைக்கப்படுகிறது. இவ்வரையறையை இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின் இன்றைய உலகில் திருச்சபை என்னும் ஏட்டின் 26 ஆம் எண்ணில் காண்கிறோம்.

தனிமனிதர்கள் நன்மை புரிவதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள். நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம்” (எபே 2:10) என்று புனித பவுல் கூறுவதை நாம் அறிவோம். அதுபோல சமூகமானது பொதுச் சமூகத்திற்கு நற்செயல்கள் புரிவதற்கென உருவாக்கப்பட்டிருக்கிறது. இச்சமூகமானது, இருவகையில் நற்செயல்கள் புரிய வேண்டும். முதலாவதாக, அனைத்து மனிதர்களுக்கும் நன்மை பயக்கும் விதத்தில் செயல்பட வேண்டும், இரண்டாவதாக, ஒவ்வொரு தனிமனிதரின் முழுமையான நன்மைக்காகவும் செயல்பட வேண்டும். அதாவது அனைவருக்கும் நன்மை புரியவேண்டும், அது போல ஒவ்வொரு மனிதரும் முழுமையை அடைய முயல வேண்டும். எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமென்றால். சமூகத்தில் வாழும் அனைவரும் கல்வி அறிவு பெற வேண்டும், அது மட்டுமல்லாமல் உயர் கல்வி, தொழிற்கல்வி, மருத்துவக் கல்வி என அனைத்தும் ஏழை பணக்காரர், அதிகாரம் படைத்தோர் என வேறுபாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இதற்கான அரசியல் அமைப்புகள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

சில அடிப்படை உரிமைகளை முக்கியமாக சமூகமானது அமைத்துக் கொடுக்க வேண்டும். அவையாவன, உணவு, உறைவிடம், நலவாழ்வு, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி. இவை அனைவருக்கும் கிடைக்கும் படி செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மனிதருக்கும், கருத்துச் சுதந்திரம், மதச்சுதந்திரம், கூட்டமாக வருவதற்கான அனுமதிகள் அனைத்தும் கிடைக்க வேண்டும்.

சாதாரணமாக மனிதர்கள் சுய நலமாக சிந்திக்கும் போக்குடையவர்கள். தங்களுடைய ஆசைகளை நிறைவேற்றுவதில் அக்கறை கொள்ளும் மனிதர்கள் சக மனிதர்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிறைவேற்றிட மனம் காட்டுவதில்லை. இதில் கிறிஸ்தவர்களாகிய நாம் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். உலக மாந்தர் அனைவரும் மீட்புப் பெற வேண்டும் என்று, தன்னையே தியாகமாக ஒப்புக்கொடுத்தவர் இயேசு. இயேசு கெத்சமனித் தோட்டத்தில் வைத்து, “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும், என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்” (மத் 26:39) என்று வேண்டினார். பொதுநலனுக்காக தன்னுடைய ஆசைகளைத் துறக்கும் இயேசுவை நாம் பார்க்கிறோம். ஆகையால் தனிமனிதர்கள் தங்களுடைய பேராசைகளை விடுத்து, அவசியத் தேவைகளை நிறைவேற்றக் கூட இயலாமல் தவிக்கும் மக்களின் நலனுக்காக உழைக்க வேண்டும். அவசியத் தேவைகளாக, உணவு, உறைவிடம், வேலை, கல்வி, நலவாழ்வு ஆகியவை காணப்படுகின்றன. இது மட்டுமல்லாமல் அனைவரின் பொதுவான் ஆன்மீகத் தேவைகளையும் நிறைவேற்றும் பொறுப்பு சமூகத்திற்கு உண்டு.

நாம் அன்பைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்போம். இதில் காதல் அன்பும் அடங்கும். ஐ லவ் யூ என்று சொல்வது இன்று அதிகரித்து விட்டது. இதைப் பற்றி திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பின்வரும் வரையறையை தருகிறார்.

ஒருவரை அன்பு செய்கிறேன் என்று சொல்கிறேன் என்றால், அந்நபருடைய நலனுக்காக நான் ஆசைப்படுவதோடு, அந்நலனை அவர் அடைவதற்காக நான் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதுபோலவே சமூகத்தை அன்பு செய்தலும். தனிநபரை மட்டும் அன்பு செய்வதோடு நிறுத்தி விடாமல், சமூகத்தின் ஒட்டுமொத்தமான நலனுக்காகவும் ஆசைப்பட வேண்டும், அதற்காக உழைக்க வேண்டும். இதற்குள் தனிநபர்கள், குடும்பங்கள், பிறக் குழுக்கள் என அனைவருடைய நலனும் அடங்கி இருக்கிறது.

புனித ஜாண் கிறிசோஸ்டோம் என்னும் திருச்சபைத் தந்தைப் பினவருமாறு கூறுகிறார். நமக்கிருப்பதை ஏழைகளுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது, ஏழைகளிடமிருந்து திருடுவதற்கும், அவர்களின் வாழ்வை அழிப்பதற்கும் சமம். நாம் சேர்த்து வைத்திருக்கும் செல்வங்கள் நம்முடையவை அல்ல, அவர்களுடையவை




Post a Comment

0 Comments