Episode 96, DOCAT 35, குடும்பம் 2

இன்றைய தினம் DOCAT நூலின் 114 மற்றும் 115 ஆவது எண்களில் கூறப்படும் குடும்பம் பற்றிய விவிலியக் கருத்துக்களை காண இருக்கிறோம்.

திரு அவை என்பது, ஒரு பண்பாட்டு மையம் அல்ல, மாறாக அது இயேசுவின் குடும்பம்என திருத்தந்தை பிரான்சிஸ் கூறுகிறார். இயேசுவால் நிறுவப்பட்ட திரு அவையைத் திருத்தந்தை குடும்பத்துடன் உவமிக்கிறார்.

சமூகத்தின் அடிப்படை அலகாக விளங்குவது குடும்பம். இங்குத் தான், மனித உயிர் பிறப்பெடுக்கிறது, மனித வாழ்வு துளிர்து இலைவிட ஆரம்பிக்கிறது, மனித உறவுகளின் அரிச்சுவடுகள் கற்பிக்கப்படுகின்றன, மனித நேயத்தின் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன, மனித உறவுகள் அறிமுகமாகின்றன. இதை வாழ்வின், உறவின், மனித நேயத்தின், பண்புநலன்களின் விளைநிலம் எனச் சொல்லலாம். ஆகையால் திரு அவையானது குடும்பத்தை கடவுளால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனமாகப் பார்க்கிறது.

நிபந்தனைகளின்றி மனிதர் அன்புச் செய்யப்படும் களமாக குடும்பம் விளங்குகிறது. குடும்பத்திற்கு நிகரானது வேறேதும் இல்லை எனலாம். பாட்டி – தாத்தா, அப்பா-அம்மா, பிள்ளைகள் எனப் பலத் தலைமுறைகள் கூடி வாழும் இடமாக குடும்பம் விளங்குவதால், மனிதர் ஒவ்வொருவரும், தோழமை, பாசப்பிணைப்பு, ஏற்பு, தன்னலமின்மை, அர்ப்பணம், உதவி, நீதி போன்ற அனைத்துக் குணங்களையும் சொந்தமாக்குகிறார்கள். திறமைகளின் அடிப்படையில் குடும்பங்களில் யாரும் நேசிக்கப்படுவதில்லை, ஏற்றுக் கொள்ளப்படுவதுமில்லை. குடும்பத்தின் உறுப்பினராக இருக்கும் ஒரே காரணத்திற்காக, உறுப்பினர்கள் கவனிக்கப்படுகிறார்கள், நேசிக்கப்படுகிறார்கள், நியாயமாக நடத்தப்படுகிறார்கள்.

சமூகத்தில் பல வேளைகளில் மனிதர்கள் தேவைக்காகவும், பிரதிபலனங்களுக்காகவும் நேசிக்கப்படுகிறார்கள். பயன்படுத்தி விட்டுத் தூக்கி எறிகிறார்கள் என்னும் சொல்வதுண்டு. இதை நுகர்வுக் கலாச்சாரம் என்று கூறுவதுண்டு. ஆனால், குடும்பம் அப்படியல்ல. குடும்பத்தில் மனிதர்கள் தேவைகளுக்காக நேசிக்கப்படுவதில்லை, ஒரு காரியத்தை அடைவதற்காக அன்புச் செய்யப்படுவதில்லை. மாறாக, அவர்கள் மனிதர்களாக இருக்கும் ஒரே காரணத்திற்காக அன்புச் செய்யப்படுகிறார்கள். இதன் அடிப்படையில்தான் அனைத்து மனித உறவுளும் அமைய வேண்டும் என்பதை நாம் முன்னர் வந்த அத்தியாயங்களில் பார்த்தோம். மனித மாண்பின் அடிப்படையை ஒருக் குழந்தைக் குடும்பத்தில் கற்றுக் கொள்கிறது. சமூகத்தில் பிற மனிதர்களை தேவைகளுக்காக அல்ல மாறாக அவர்கள் மனிதர்கள் என்னும் ஒரே காரணத்திற்காக அன்புச் செய்யப்பட வேண்டும் என்பதை குடும்பம் ஆனது கற்பிக்கிறது.

வாங்கவோ விற்கவோ முடியாதது அன்பு. அது மனிதர் மனமுவந்து எவ்வித வற்புறுத்தலுமின்றி கொடுப்பது, அவ்வாறேப் பெற்றுக்கொள்வதும்என்றுத் திருத்தந்தை இரண்டாம் ஜாண்பால் கூறுகிறார். இத்தையச் சூழலானது குடும்பத்தில் மட்டுமே ஏற்படுகிறது.

குடும்பத்தைக் காப்பதில் பெற்றோருக்குப் பெரும் பங்கு உண்டு. பெற்றோர் தங்கள் குடும்பத்தை, குடும்ப இறைவேண்டல், முன்மாதிரியான வாழ்வு ஆகியவற்றால், பிள்ளைகளையும் பிற உறுப்பினர்களையும், மானிட முதிர்ச்சி, மீட்பு, தூய்மையை நோக்கி நடத்திச் செல்கிறார்கள்என்று இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின் இன்றைய உலகில் திருஅவை என்னும் ஏட்டின் 48 ஆம் எண் கூறுகிறது.

புனித அகுஸ்தினார், குழந்தைகள் வாசித்துப் படிக்கும் நூலாக பெற்றோர்கள் விளங்குகிறார்கள்என்று கூறுகிறார்.



Post a Comment

0 Comments