Episode 81, Docat 20 – கத்தோலிக்க சமூக படிப்பினையின் மூலக்கோட்பாடுகள்

 மானிடர் ஒவ்வொருவரும் சமூக உயிரிகள் என்பதை கிரேக்க மெய்யியலார் அரிஸ்டோட்டில் அவர்கள் கூறினார். இது முற்றிலும் உண்மை. மனிதராகப் பிறக்கின்ற ஒவ்வொருவரும் சமூகத்தை சார்ந்து வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள். பிறப்பு தொடங்கி இறப்பு வரை இது தொடர்கிறது. உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள் என்னும் இயேசுவின் கட்டளையை ஏற்று இயங்கிக் கொண்டிருக்கும் திரு அவையானது, தனி மனிதரின் மீட்பை பற்றிய ஆர்வத்துடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. கடவுளின் உருவில் படைக்கப்பட்ட மனிதர்கள் மாண்புடன் உலகில் வாழ வேண்டும் என்பது கிறிஸ்துவின் படிப்பினையின் ஆழமான உள்ளீடாக இருக்கிறது. மனிதர்கள் மாண்புடன் வாழ வேண்டும் என்றால் சமூகமானது, ஒவ்வொருவரையும் மாண்புடன் நடத்துகின்ற அமைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். சமூக வாழ்வின் சட்டங்களை நிர்ணியிக்கும் அரசியல் அமைப்புகளும் தனி மனித மாண்பை உறுதி செய்ய வேண்டும். சாதி, மொழி, இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளைப் பேணும் போது, மனிதம் சிதைக்கப்படுகிறது. அவ்வாறே, வேலையாட்களுக்கு போதிய ஊதியம் கொடுக்காமல் இருக்கும் போது, மனித மாண்பு குறைந்து போகிறது. இதை கவனத்தில் கொண்டு, திரு அவையானது 1891 ஆம் ஆண்டு தொடங்கி சமூக வாழ்வை பாதிக்கும் அடிப்படை பிரச்சனைகளைப் பற்றிப் பேசுகிறது. திருத்தந்தை பதிமூனறாம் லியோ அவர்கள் 1891 ஆம் ஆண்டு மே 15 ஆமே தேதி Rerum Novarum (ரேரும் நொவாரும்) என்னும் திருத்தூது மடலை வெளியிட்டார். இது தொழிலாளர் சாசனம்என்னும் பெயரில் அறியப்படுகிறது. இம்மடலானது, தொழிற்புரட்சியின் விளைவாக ஏற்பட்ட மாற்றங்களால், தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்படும் போக்கு ஏற்பட்டப் போது வெளியிடப்பட்டது. தொழிலாளர்களுக்கு உரிய ஊதியத்தை கொடுக்க வேண்டும் என்பதை இம்மடலானது அழுத்தமாக முன்வைத்தது. திருஅவையின் சமூகப் படிப்பினைகளின் வெளிப்படையான முதல் படிப்பினையாக இருந்தது இம்மடல். இது தொடங்கி இன்று வரை சமூகப் படிப்பினைகளை திருத்தந்தையர்கள் வெளியிட்டு வருகிறார்கள். மேலும், 1962 முதல் 1965 ஆம் ஆண்டு வரை நடந்த இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின் இன்றைய உலகில் திருச்சபைஎன்னும் ஏடானது, சமூக வாழ்வைப் பற்றி விரிவாக பேசுகிறது. இத்தகையப் படிப்பனைகள் எல்லாம் நான்கு மூலக்கோட்பாடுகளைக் கொண்டவையாக உள்ளன. இதைப்பற்றி DOCAT நூலின் 84 ஆம் எண் ஆனது குறிப்பிடுகிறது. அவையாவன.

1.   தனிமனித மாண்பு பற்றிய கோட்பாடு – the principle of the human person

2.   பொதுநலம் பற்றிய கோட்பாடு - the principle of the human common good

3.   துணை அமைப்பு முறை பற்றிய கோட்பாடு – the principle of subsidiarity

4.   ஒருமைப்பாடு பற்றிய கோட்பாடு – the principle of solidarity

இந்த நான்கு மூலக்கோட்பாடுகளின் அடிப்படையில் மானிட சமூகத்தை நாம் விளங்கிட முடியும். ஏன் இவை நான்கும்? முதலாவதாக இவை அறிவுபூர்வமானவை. சிந்திக்கும் திறன் படைத்த மனிதர்களால் இவற்றை புரிந்து இயங்கிட இயலும். இரண்டாவதாக இவை கிறிஸ்தவ நம்பிக்கை மற்றும் அன்பை அடியொற்றியவை. கிறிஸ்தவ அன்பைப் பற்றி திருவிவிலியம் பின்வருமாறு கூறுகிறது.

உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!” (இணைசட்டம் 6:5) மற்றும் உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக!” (லேவி 19:18).

அன்பின் மிகச்சிறந்த கட்டளையாக அறியப்படும் இவை இரண்டையும் அடிப்படையாகக் கொண்டுதான் திரு அவையின் சமூகப் படிப்பினைகளானது முன்வைக்கப்படுகின்றன. கத்தோலிக்கத் திரு அவை முன்வைக்கும் இவற்றைப் பற்றி அறிவோம். வாழ்வோக்குவோம்.




Post a Comment

0 Comments